

பிளஸ் 1 கணித பாடத்தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடத்தேர்வுகள் முடிந்த நிலையில் கணிதம், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றன.
இந்த தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 3,016 மையங்களில் 8.2 லட்சம் மாணவர்கள் எழுதினர். இத்தேர்வில் 5 மதிப்பெண் பகுதியை தவிர்த்து 1, 2 மற்றும் 3 மதிப்பெண் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல், விலங்கியல் மற்றும் நுண்ணுயிரியல் வினாத்தாள்களும் கடினமாக இருந்துள்ளன. அதேநேரம் வணிகவியல், உள்ளிட்ட இதர பாடத்தேர்வுகள் எளிதாக அமைந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கணினி அறிவியல், உயிரி வேதியியல், மனை அறிவியல், அரசியல் அறிவியல் பாடத் தேர்வுகள்நாளை நடைபெற உள்ளன.