

கரோனாவில் இருந்து சிறுவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து காமிக்ஸ் புத்தகத்தை வெளியிட்டு மத்திய அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
''குழந்தைகள், வாயு, கரோனா'' என்ற பெயரில் முழுக்க முழுக்க காமிக்ஸ் வடிவில் இந்தப் புத்தகம் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. வண்ண வண்ண படக் கதைகளுடன் 22 பக்கங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், காமிக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதில் 'வாயு' எனும் சூப்பர் ஹீரோ, சிறுவர்களுக்குத் தோன்றும் கரோனா தொடர்பான அத்தனை சந்தேகங்களையும் உடனுக்குடன் தீர்த்து வைக்கிறார். வணக்கம் சொல்வது, நண்பர்களுடன் விளையாடச் செல்வது, பூங்கா போவது, கைகளைச் சுத்தமாகக் கழுவுவது, தூய்மையாக இருப்பது, பயணங்களைத் தவிர்ப்பது உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்துகிறார் வாயு.
சண்டிகரைச் சேர்ந்த சுகாதார உயர் அதிகாரிகள் பங்களிப்போடு, மத்திய அரசின் சுகாதார மற்றும் பெண்கள் நலத் துறை இதை வெளியிட்டுள்ளது.
குழந்தைகளுக்கு அறிவுரையாகச் சொல்லாமல், காமிக்ஸைக் காண்பித்தாலே போதும். தங்களைத் தற்காத்துக் கொள்வர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காமிக்ஸ் புத்தக இணைப்பு: வாயு காமிக்ஸ்