Published : 10 Mar 2020 03:16 PM
Last Updated : 10 Mar 2020 03:16 PM

நாட்டில் 40 சதவீத அரசுப் பள்ளிகளில் மின்சாரம், விளையாட்டு மைதானம் இல்லை: நாடாளுமன்றக் குழு அறிக்கையில் தகவல்

நாட்டில் 40 சதவீத அரசுப் பள்ளிகளில் மின்சாரம் கிடையாது. மாணவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் இல்லை என்று கல்விக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டின் அளவும், அதைப் பயன்படுத்தியது குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டதில், உள்கட்டமைப்பில் இடைவெளி இருப்பது தெரியவந்துள்ளது.

2020-2021 ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்விக்கான மானிய அறிக்கை கடந்த வாரம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பள்ளிக் கல்வித்துறை முன்வைத்திருந்த நிதி ஒதுக்கீட்டில் 27 சதவீதம் குறைக்கப்பட்டு இருப்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கவலை தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்விக்கு ரூ.82 ஆயிரத்து 570 கோடி ஒதுக்கீடு செய்யலாம் எனப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், ரூ.59 ஆயிரத்து 845 கோடிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் திட்டங்கள், மற்றும் மத்திய அரசின் உதவியோடு நடைபெறும் திட்டங்களுக்கு 27 சதவீதம் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட ஒதுக்கீட்டில் கூடுதலாக நிதி ஒதுக்கிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நிதிப் பற்றாக்குறை குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மின்சாரம், மைதானம் இல்லை

நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் 56 சதவீதப் பள்ளிக்கூடங்களில் மட்டுமே மின்சாரம் இருக்கிறது. இதில் மணிப்பூர், மத்தியப் பிரதேச மாநிலங்களில் 20 சதவீதத்துக்கும் குறைவான பள்ளிகளில்தான் மின்சாரம் இருக்கிறது.

அதேபோல 57 சதவீதத்துக்கும் குறைவான அரசுப் பள்ளிக்கூடங்களில் விளையாட்டு மைதானம் இருக்கிறது. அதிலும் ஒடிசா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் 30 சதவீதப் பள்ளிகளில் மட்டுமே விளையாடுவதற்கு மைதானம் இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 சதவீதப் பள்ளிக்கூடங்களில் சுற்றுச்சுவர் இல்லாமல் இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு, பள்ளிகளின் சொத்து ஆகியவை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 2017-18 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் முறையில் (யுடிஐஎஸ்இ) புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டியுள்ளது.

பரிந்துரைகள்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தோடு, மனித வளமேம்பாட்டுத்துறை இணைந்து, செயல்பட்டால், பள்ளிகளுக்குச் சுற்றுச்சுவரை எளிதாக எழுப்ப முடியும். தேவையான தொழிலாளர்களைப் பெற முடியும். அதேபோல புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் பள்ளிகளுக்குச் சூரிய ஒளி மூலம் மின்சாரம் கிடைக்கும் என நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளை வலுப்படுத்தும் விதமாக வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள், நூலகம் ஆகியவை கட்டுவதில் மோசமான மந்தநிலை காணப்படுகிறது என்று நாடாளுமன்ற நிலைக்குழு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மந்தநிலையில் பணிகள்

கடந்த 2019-20 ஆம் ஆண்டில் 2,613 திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்ட நிலையில் முதல் 9 மாதங்களில் 3 திட்டங்கள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தாமதங்கள், மந்தநிலை போன்றவை மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து விலகும் மனநிலையை உருவாக்கிவிடும் என்று நிலைக்குழு கண்டித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி வரை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாகப் புதிதாக ஒரு வகுப்பறை கூட கட்டப்படவில்லை. ஆனால், கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் 1,021 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் இந்த மந்தமான நிலை இருக்கிறது.

1,343 ஆய்வுக்கூடங்கள் கட்ட அனுமதிக்கப்பட்ட நிலையில், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றுக்காக 3 ஆய்வுக்கூடங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. 135 நூலகங்கள், 74 கலை,கலாச்சார, கைவினைக் கூடங்கள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், அதில் ஒன்றுகூடக் கட்டப்படவில்லை. இந்த நிதியாண்டும் மார்ச் மாதத்துடன் முடியப்போகிறது.

ஆனால், உயர்நிலைப் பள்ளிகளில் இந்த வசதிகள் என்பது 75 சதவீதம் டிசம்பர் வரை நிறைவேற்றப்பட்டுள்ளது. 5 சதவீதம் சிறப்பு மாணவர்களுக்கான வசதிகளும் ஏற்பட்டுள்ளன. அதேசமயம், தொடக்கப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையில் முக்கிய அம்சமாக, "பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் காரணிகளைக் கூர்ந்து பார்த்து விரைவாக முடிக்க வேண்டும். மாணவர்களுக்குச் சிறந்த வசதிகளை உருவாக்கித் தர வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகளில் குறைவு ஏற்படும்போது, அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில் புறக்கணிப்புத் தன்மை உருவாகி, அவர்கள் பள்ளியிலிருந்து விலகும் சூழல் ஏற்படும். மேலும், தாமதமாகும் திட்டங்களால் எதிர்காலத்தில் கூடுதலாகத்தான் செலவாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x