

ராஜஸ்தான் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இணைந்து வைஃபை, ப்ளூடூத்தில் இயங்கும் கூலரைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து பாரதிய திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகத் தலைவர் கர்னல் ராஜ்குமார் கூறும்போது, ''இந்த கூலரை உங்களின் போன் அல்லது டேப்லெட்டுடன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் வழியாக இணைத்துக் கொள்ளலாம். விரைவில் ஆப்பிள் இயங்குதளத்திலும் இதற்கான வசதிகள் செய்யப்படும்.
இதில், 12 வாட்ஸ் - 2.4 வாட்ஸ் அடாப்டர் உள்ளது. கூலரில் உள்ள ஃபேன்கள், குளிர்ச்சியான சூழலில் தானாகவே நின்றுவிடும். நாமாக இயக்கும் வகையிலும் செட்டிங்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.
எளிய இயந்திரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கூலர், 60 ஆண்டுகள் வரை தாங்கும். மின்சாரத்தைக் குறைவாகவே செலவழிக்கும் ஆற்றல் உடையது. கார்பன் உமிழ்வையும் இந்த கூலர் தடுக்கும்.
மனோஜ் மற்றும் விகாஸ் ஆகிய இரு மாணவர்களும் இணைந்து இந்த கூலரை உருவாக்கி உள்ளனர். வெறும் 15 நாட்களில் இந்த கூலர் உருவாக்கப்பட்டுள்ளது'' என்று ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.