

பொதுத்தேர்வின்போது போராட்டங்கள் நடத்துவதைத் தவிர்க்க அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும் புதுச்சேரி பெற்றோர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் மாணவர்களுக்கு இரு சக்கர வாகனங்களைத் தராதீர்கள் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்க தலைவர் நாராயணசாமி கூறுகையில், "மாணவர்கள் பதற்றம் இல்லாமல் தேர்வு எழுதச் சென்று வர, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எந்தவிதப் போராட்டங்களும் நடத்தாமல் ஒத்துழைப்புத் தர வேண்டும்" என்று குறிப்பிட்டனர்.
டூவீலர் தராதீர்கள்
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், "மாணவர்களின் பெற்றோர்கள் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்க மோட்டார் வாகனங்களைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லும்போது அதிக வேகம் இல்லாமலும் விரைந்து செல்வதையும் தவிர்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டனர்.
எரியாத தெருவிளக்குகள்
தெருவிளக்குகள் குறித்து பிளஸ் 2 மாணவர்கள் கூறுகையில், "காலையிலும் மாலையிலும் டியூஷன் செல்கிறோம். தேர்வுக் காலங்களில் இணைந்து படிக்கிறோம். ஆனால் பல சாலைகளிலும், தெருக்களிலும் தெருவிளக்கே எரிவதில்லை. பொதுத்தேர்வு காலங்களில் தெருவிளக்குகள் எரிவதை உறுதிப்படுத்த வேண்டும். சாலைகளில் பள்ளங்களும் அதிகளவில் உள்ளன. இவற்றை அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டனர்.