Published : 29 Feb 2020 07:24 AM
Last Updated : 29 Feb 2020 07:24 AM

பொதுத்தேர்வில் காப்பி அடித்தால் 2 ஆண்டுகள் தேர்வெழுத தடை: மாணவர்களுக்கு அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி அடித்தாலோ, காப்பி அடிக்க முயன்றாலோ 2 ஆண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்படும் என அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதியும், பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதியும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 27-ம் தேதியும் தொடங்க உள்ளன. இந்நிலையில், பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தேர்வுத் துறைஎச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத்தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதவது:

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் பாடம் தொடர்புடைய துண்டுச் சீட்டுகள், நோட்டுகள்,புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த மாணவரிடம் எழுத்துப்பூர்வமான விளக்கம் பெற்றுஉடனடியாக அவர் தேர்வுக்கூடத்தை விட்டு வெளியேற்றப் படுவார். தேர்வுக்கூடத்தில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவரின் விடைத்தாளைப் பார்த்து காப்பி அடிப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர் உடனடியாக வெளியேற்றப்படுவார். அவர் ஓராண்டுக்கு தேர்வெழுத முடியாது.

ஆள்மாறாட்டம்

அதேபோல், ஒரு மாணவர் காப்பி அடிக்கும்போதோ அல்லது காப்பி அடிக்க முயலும்போதோ பிடிபட்டால் அவர் அடுத்த 2 ஆண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்படும்.

ஆள்மாறாட்டம் செய்தால் அவரது தேர்வு பங்கேற்பு ரத்து செய்யப்படுவதுடன், தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும். விடைத்தாள்களில் ஒரு தாளுக்குப் பதில் வேறு விடைத்தாளை இணைத்தால் தேர்வு பங்கேற்பு ரத்து செய்யப்படும். மேலும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு தேர்வெழுத முடியாது. விடைத்தாளில் அநாகரீகமாக ஏதேனும் எழுதியிருந்தாலோ அல்லது தேர்ச்சி மதிப்பெண் வழங்குமாறு கோரி ஏதேனும் குறிப்பிட்டிருந்தாலோ அந்த விடைத்தாள் ரத்து செய்யப்படும்.

தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் தவறாக நடந்தால் அந்த மாணவர் தேர்வுக்கூடத்தை விட்டுஉடனடியாக வெளியேற்றப்படுவார். தேர்வு முடிந்ததும் மற்ற மாணவர்கள் மீது வினாத்தாளை வீசும் மாணவரின் விடைத்தாள் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x