Published : 28 Feb 2020 03:16 PM
Last Updated : 28 Feb 2020 03:16 PM

பாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்றுசேருங்கள்: மாணவர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுரை

பாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்றுசேருங்கள் என்று கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி மாணவர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தி உள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மாமல்லபுரம் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் இன்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:

''நான்கு வகையான கோயில் நினைவுச் சின்னங்கள் ஒரே இடத்தில் இருக்கும் அபூர்வமான யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடமாக மாமல்லபுரம் உள்ளது. கட்டிடக் கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி அமைப்பதற்கு இதைவிடச் சிறந்த இடம் வேறு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

பரதநாட்டியத்தின் பிறப்பிடமாகவும், சாஸ்திரிய சங்கீத பாரம்பர்யம் மிகுந்த இடமாகவும், இந்தியாவின் பல வகையான கலாச்சாரங்களின் வளமைகளைக் கொண்டதாகவும் தமிழகம் உள்ளது. இன்றைக்கு தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பம் போன்ற கலைகளின் திறமை வெளிப்பாடுகளைப் பார்த்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பழமையான கலை வடிவங்களுடன், நாட்டுப்புறக் கலை வடிவங்களும் இங்கு வளமையாக உள்ளன.

இந்தியாவில் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மொழியாக தமிழ் உள்ளது. அதன் வளமையான இலக்கியங்கள் உத்வேகம் தருபவையாக உள்ளன. அதன் கவிதைகளுக்கு உலக அளவில் ஈர்ப்பு உள்ளது. காலங்களைக் கடந்த ஞானமாக உள்ள திருக்குறள் இப்போதும் நமக்கு வழிகாட்டியாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில் போன்ற பெரிய கோயில்கள், நம்முடைய கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலையின் மேன்மையான திறமைகளைப் பறைசாற்றும் சாட்சிகளாக உள்ளன. இந்த நினைவுச் சிற்பங்கள் மாணவர்களின் கற்பனையைத் தூண்டிவிடுவதாக இருக்க வேண்டும். இந்த நினைவுச் சின்னங்கள் கலை வடிவங்களாக மட்டுமின்றி, பொறியியல் துறையின் அற்புதங்களாகவும் உள்ளன.

இதை உருவாக்கியவர்களிடம் இருந்து நமது பொறியியல் மாணவர்கள் உத்வேகம் பெற வேண்டும். இதுபோன்ற நினைவுச் சின்னங்களை எப்படி உருவாக்கியிருப்பார்கள், என்ன மாதிரியான உத்திகளைப் பயன்படுத்தியிருப்பார்கள், எப்படி வரைபடங்கள் தயாரித்திருப்பார்கள், இவ்வளவு அதிக உயரத்தில் சிற்பங்களைச் செதுக்க எந்த அளவுக்கு தளங்கள் அமைத்திருப்பார்கள் என்பது பற்றியெல்லாம் யோசிக்க வேண்டும்.

21-ஆம் நூற்றாண்டில் கட்டிடக் கலை நிபுணர்கள் மற்றும் திட்டமிடல் நிபுணர்களின் பங்களிப்பு வெறுமனே வடிவமைப்பு செய்வது, மக்கள் குடியிருப்புகள் மற்றும் கட்டடங்களுக்கு வடிவம் கொடுப்பதாக மட்டும் இல்லை. இன்றைய உலகில் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் முக்கிய பங்காற்றி வருவதால், வேகமாக மாறி வரும் உலகின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய அளவுக்கு கட்டிடக் கலை நிபுணர்கள் புதுமை சிந்தனையாளர்களாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் பாதுகாப்பு மற்றும் நீடித்த தன்மை என்ற இரட்டைக் கோட்பாடுகள் உங்களுடைய அனைத்து திட்டங்களிலும் முக்கிய அம்சங்களாக இருக்க வேண்டும். குறைவான தண்ணீரைப் பயன்படுத்தும், மின்சாரத்தைக் குறைவாக பயன்படுத்தும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை கட்டடங்களுக்கான திட்டங்களை ஊக்குவிப்பதுதான் இப்போதைய தேவையாக உள்ளது. தானாக நடக்கும் செயல்பாடுகள் மூலம் `ஸ்மார்ட் கட்டிடங்களை' கட்டுவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் சாதகமான விஷயங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கட்டிடக் கலையில் பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பத்தை ஒன்று சேர்த்து, சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையிலும், நீடித்த பயன் தரக் கூடிய வகையிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நகர்ப்புற மையங்களில் உள்ளதைப் போன்ற வசதிகளை கிராமப் பகுதிகளிலும் உருவாக்க வேண்டியது முக்கியம்.

உலகில் வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. உலகில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவாகும் பாதையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம். உங்கள் கனவுகளை நனவாக்கி, இலக்குகளை எட்டுவதற்கு நீங்கள் அடியெடுத்து வைக்கும் இந்தத் தருணத்தில் ஏராளமான அற்புதமான வாய்ப்புகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

போதும் என்ற மனநிலை எப்போதும் வந்துவிடாமல், தனிச்சிறப்பு நிலையை எட்டுவதை இலக்காக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய துறையில் முன்மாதிரிகளை உருவாக்குபவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் நீங்கள் ஆக்கபூர்வ பங்காளர்களாக இருக்க வேண்டும்.

சிற்பிகளுக்குப் பயிற்சிகள் கொடுத்து, திறன்களை வளர்ப்பதன் மூலம் பழங்கால, கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதலில் இந்தக் கல்லூரி முக்கியப் பங்காற்றுகிறது. தனித்துவமான அம்சங்கள் காரணமாக, மாமல்லபுரத்தில் கைகளால் உருவாக்கப்படும் கல் சிற்பங்களுக்கு 2017-ல் புவிசார் குறியீடு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. பாரம்பரியமான ஞானத்தை, நவீன அறிவியலுடன் சரியாக சேர்த்து, உங்களுடைய துறைகளில் மேன்மை நிலையை எட்டுவீர்கள் என்றும் நம்புகிறேன்''.

இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x