

பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள், தங்களுடைய அச்சிடப்பட்ட விவரங்களைச் சரிபார்த்துக் கையொப்பமிட்டால் போதும் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகள், வருகிற 02.03.2020 அன்று தொடங்கி 13.04.2020 வரை நடைபெற உள்ளன. குறிப்பாக காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.
இதற்கிடையே தேர்வின்போது தேர்வர்களது புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் அச்சிடப்பட்ட முகப்புச் சீட்டுகள் முதன்மை விடைத்தாளுடன் இணைத்துத் தைக்கப்பட்டே தேர்வர்களுக்கு வழங்கப்படுகின்றன. தேர்வர் முகப்புச் சீட்டில் அச்சிடப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்த்துக் கையொப்பமிட்டால் மட்டுமே போதுமானது.
அனைத்துத் தேர்வு மையங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் முதன்மை விடைத்தாள், கூடுதல் விடைத்தாள்கள் மற்றும் முகப்புச் சீட்டுகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
நுழைவுச் சீட்டில் சிறப்பு அறிவுரைகள்
அத்துடன் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வர்களுக்காக சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வினாத்தாள் மற்றும் விடைத் தாள்களில் வழக்கமாக அச்சிடப்படும் அறிவுரைகளை, தேர்வுக்கு முன்னதாகவே தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளின் மூலமாகவே படித்து அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.