

புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய 23 மாணவர்கள் குழுவுக்கு 'சாத்ரா விஸ்வகர்மா' விருதை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் இன்று டெல்லியில் வழங்கினார்.
விழாவில் பேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''இந்தியா முழுவதிலும் இருந்து 6,676 குழுக்கள் தங்களின் கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்திருந்தனர். அதில் 117 குழுக்கள் இறுதிக் கட்டத்துக்குத் தேர்வானதை அறிந்தேன். இது இந்தியாவில் ஏராளமான திறமையாளர்கள் இருப்பதைக் காட்டுகிறது. இந்த மாணவர்கள் நாட்டின் சொத்துகள். இவர்கள் மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குபவர்கள்'' என்று தெரிவித்தார்.
2017-ம் ஆண்டில் இருந்து ஏஐசிடிஇ சார்பில், விஸ்வகர்மா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூகத்தின் வளர்ச்சிக்காக புத்தாக்க வகையிலும் அறிவியல்பூர்வமாகவும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்களுக்கு இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன. 2019-ம் ஆண்டில் இருந்து ஐஎஸ்டிஇ மற்றும் அடல் புத்தாக்கத் திட்டமும் இணைந்து ஏஐசிடிஇயுடன் இந்த விருதை வழங்குகின்றன.
இந்தியா முழுவதிலும் இருந்து 6,676 குழுக்கள் இதற்காக தங்களின் கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்திருந்தன. அதில் 3 கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு 117 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் இருந்து இறுதிக் கட்டமாக 8 பிரிவுகளின் கீழ் 23 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு பிரிவின் கீழும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் குழுக்களுக்கு விருதோடு ரொக்கப் பரிசும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.