Last Updated : 24 Feb, 2020 01:48 PM

 

Published : 24 Feb 2020 01:48 PM
Last Updated : 24 Feb 2020 01:48 PM

பள்ளி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்வு: புதுச்சேரியில் தொடக்கம்

பள்ளி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்வை புதுச்சேரியில் இளையோர் அமைப்பினர் தொடங்கியுள்ளனர்.

பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவிகள் பலரும் எப்படி தேர்வை எதிர்கொள்வது என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். அதிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், ஆர்வமுள்ளோருக்கும் உதவ இளைஞர்கள் வழிகாட்டல் நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளனர். புதுவை, காட்டேரிக்குப்பம் பகுதி மாணவர்களுக்காக இந்திரா காந்தி அரசு உயர் நிலைப்பள்ளி ஆலோசனைக் கூடத்தில் இந்நிகழ்ச்சியை நடத்தினர்.

இளைஞர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மைய நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு “சாதிக்கலாம் வாங்க” என்ற தலைப்பில் 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பை நடத்தினர். இந்நிகழ்வில் ஆரியபட்டா அறிவியல் மன்றப் பொறுப்பாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். புதுவை மாநில அறிவியல் மன்றச் செயலர் அருண் நாகலிங்கம் தலைமை வகித்தார். தன்னார்வலர் அஜித்குமார் நோக்க உரையாற்றினார்.

விழாவிற்குத் தலைமையுரை வழங்கிய அருண் நாகலிங்கம் மாணவர்களுக்கான தன்னம்பிக்கைக் கருத்துகளைக் கூறினார். விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஜுகல் கிஷோர், “நீங்களும் சாதிக்கலாம்” என்ற தலைப்பில், ‘மாணவர்கள் தங்கள் சிந்தனைகளைச் செம்மைப்படுத்திச் சாதனை செய்யவேண்டும்’ என்று பேசினார்.

தன்னார்வலர்கள் பேசிய உரையின் முக்கிய அம்சங்கள்

பிரான்சிஸ்: கடின உழைப்பே என்றும் வாழ்க்கையில் வெற்றியைத் தரும். தன்னம்பிக்கையே கடின உழைப்பிற்கு ஆதாரமாகும். ஆகவே தன்னம்பிக்கையோடு கூடிய கடின உழைப்பிற்கு மாணவர்கள் தயாராக வேண்டும், எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம்.
சரவணன்: மாணவர்கள் தங்கள் பாடங்களை விருப்பத்துடன் படிக்கும்போது மட்டுமே நினைவில் வைத்துத் தேர்வை நல்ல முறையில் எழுத முடியும்.
யுவராஜ்: ஞாபக மறதி என்பது ஒரு பிரச்சினை அல்ல. உள்ளே இருப்பதை வெளியே கொண்டு வருவதில்தான் பிரச்சினை உள்ளது. விரும்பிச் செய்யும் எந்த வேலையும் வெற்றியடையும். பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் அன்பு அதிகரிக்கும்போது அனைத்தையுமே சாதிக்கலாம்.
புனிதா: சரியான தூக்கமும், உணவும் உடலுக்குத் தேவையான வலிமையைத் தரும். இவ்வலிமையோடு தன்மை, எளிமை, பொறுமை ஆகியவை மாணவர்களுக்கு வாழ்வில் வெற்றியைத் தரும்.

பாடங்களை மிக வேகமாகக் கற்பது எவ்வாறு என்றும், கற்கும்போது மாணவர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை பற்றியும் விரிவாகக் கூறினார் சக்தி. இப்பயிற்சிகளின் முக்கியத்துவத்தை அறிந்த மாணவர்கள் பயிற்சிகளில் மிக ஆர்வமாக ஈடுபட்டனார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல்வேறு அரசுப் பள்ளிகளில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் மாணவர்களுக்கு, பொதுத்தேர்வுக்கான எளிய வழிமுறைகளையும் மதிப்பெண்களின் முக்கியத்துவத்தையும் லலிதா பெரியசாமி எடுத்துரைத்தார். தேர்வு வழிமுறைகளை மாணவ, மாணவிகளும் முன்வந்து எடுத்துரைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x