

ராம்ராஜ் காட்டன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை இணைந்து வழங்கும் ‘அன்பாசிரியர் விருது' வழங்கும் விழா திருப்பூரில் நாளை (பிப்.23) நடைபெறுகிறது.
மாணவர்களுக்கு தனித்துவமான கல்வியை அளிப்பதோடு நின்றுவிடாமல், திறமை, சமூக அக்கறை, நற்பண்புகளை ஊட்டி, பள்ளியையும் மேம்படுத்திவரும் ஆசிரியர்கள் பலர் பொதுவெளியில் இன்னும் அறியப்படாமல் இருக்கிறார்கள். அத்தகைய ஆசிரியர்களைக் கவுரவிக்கும் நோக்கில் ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் ‘அன்பாசிரியர்' என்ற விருதை வழங்குகிறது.
இவ்விருதுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தங்களின் செயல்பாடுகள் பற்றிய விவரத் தொகுப்பை ஆன்லைன் வழியாகவும் தபால் மூலமாகவும் அனுப்பியுள்ளார்கள். அவர்களில் அன்பாசிரியரைத் தேர்வு செய்ய மூத்த கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்று விவரத் தொகுப்புகளைப் பரிசீலனை செய்தது. அதில், தேர்வான ஆசிரியர்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி என 4 மண்டலங்களில் நடைபெற்ற நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார்கள்.
மாவட்டத்துக்கு ஒருவர் மற்றும் புதுச்சேரிக்கு ஒருவர் என நேர்காணலில் தேர்வான 38 ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா, திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நாளை (பிப்.23, ஞாயிற்றுக்
கிழமை) மாலை 3.00 மணிக்குத் தொடங்குகிறது.
அன்பாசிரியர் விருதை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை
அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்குகின்றனர்.
இவ்விழாவில், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.குணசேகரன், கே.என்.விஜயகுமார், ஏ.நடராஜன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். விழாவின் பிற சிறப்பு நிகழ்வுகளாக ‘அன்பாசிரியர்’ நூல் வெளியீடும், திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் குழுவினரின் ‘தமிழ் ஓசை’ எனும் சேர்ந்திசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளன.
இவ்விழாவை லட்சுமி செராமிக்ஸ், எஸ்.எம்.சில்க்ஸ், சங்கர் ஐஏஎஸ் அகாடமி, கல்யாண் ஜுவல்லர்ஸ், நியூஸ் 7 ஆகியவை இணைந்து வழங்குகின்றன.