

‘‘ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு ஆண்களை போன்று உயர்ந்த பதவிகள் வழங்குவதில் எவ்விதமான தடையும் இல்லை. ஓய்வுபெறும் காலம் வரை பணியாற்றலாம்’’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.விமானப் படை,கடற்படை ஆகியவற்றில் பெண்கள்குறுகிய காலம் மட்டுமே பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இதனை எதிர்த்து கடற்படை பெண் அதிகாரிகள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கடற்படையில் பெண்களை முழு நேர சேவையில் பணியமர்த்துமாறு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டுமனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணையின்போது, ராணுவத்தில் கமாண்டர் போன்ற பதவிகளுக்கு பெண்களை ஏன் தேர்வுசெய்யக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
அதற்கு மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் அளித்த பதிலில் கூறியதாவது: ஆண்களை ஒப்பிடும்போது, பெண்களின் உடல் வலிமை மிகவும் குறைவு. அதேபோல், மகப்பேறுகாலங்களில் அவர்கள் நீண்டவிடுமுறை எடுக்க வேண்டியிருக்கும். குழந்தைகளைப் பராமரிப்பது, கணவர்களின் தேவைகளைக் கவனிப்பது உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் பெண்களுக்கு உள்ளன.இதனால், ராணுவத்தில் கமாண்டர்களாகப் பணிபுரிவது பெண்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும்.
இவ்வாறு பாதுகாப்புத் துறை தெரிவித்திருந்தது.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நிதிபதி உத்தரவிட்டதாவது:
பெண்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்படும் பிரச்சினைகள், காரணிகள் எல்லாம் அவர்கள் ராணுவத்தில் உயர்ந்த பதவிகளைப் பெறுவதற்குத் தடையாக இருக்கும் என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தில் அதற்கு எந்தவிதமான இடமும் இல்லை. ராணுவத்தில் சமத்துவத்துடன் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்.
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள்ஆகிவிட்டன. ராணுவத்தில் பெண்களுக்கும் உயர்ந்த அதிகாரிகள் அந்தஸ்து பதவிகள் வழங்க வேண்டும்.பல்வேறு பெண் அதிகாரிகள் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்கள். சேனா விருதுகளைப் பெற்றுள்ளார்கள். ஐ.நா. அமைதிப் படையில் பணிபுரிந்துள்ளார்கள். பெண்களை நடத்தும் போக்கில் அரசின் மனநிலையில் மாற்றம் தேவை.
ராணுவத்தில் ஆண் அதிகாரிகளுக்கு நிகராக, பெண் அதிகாரிகளும் தங்கள் ஓய்வு காலம் வரைபணியாற்றலாம். அதற்கு மத்திய அரசுஅடுத்த 3 மாதங்களுக்குள் கொள்கைமுடிவுகளை வகுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.