Last Updated : 18 Feb, 2020 06:54 AM

 

Published : 18 Feb 2020 06:54 AM
Last Updated : 18 Feb 2020 06:54 AM

முதன்மைத் தேர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்; குரூப் 4 பதவிகளுக்கு 2 தேர்வு முறை கூடாது: கல்வியாளர்கள், தேர்வர்கள் வலியுறுத்தல்

கிராமப்புற தேர்வர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் குரூப் 4 பதவிகளுக்கான 2 தேர்வு முறை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி திரும்பப்பெற வேண்டும் என்று கல்வியாளர்கள், தேர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 4, குரூப் 2-ஏதேர்வுகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகி வரும் தகவல்கள் அதிர்ச்சிஅளிப்பதாக உள்ளன.

இதையடுத்து தேர்வு எழுத ஆதார் கட்டாயம், குரூப் 4 பதவி களுக்கு முதல்நிலை, முதன்மை என 2 தேர்வுகள், மையங்களை தேர்வு செய்வதில் கட்டுப்பாடுகள் என பல்வேறு மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி செய்து வருகிறது.

இந்நிலையில், குரூப் 4 பதவிகளுக்கு முதன்மைத் தேர்வால் கிராமப்புற தேர்வர்கள் அதிகம் பாதிக்கப்படுவர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து போட்டித் தேர்வு பயிற்சி நிபுணர் இரா.சூர்யபிரகாஷ் கூறியதாவது:

குரூப் 4 பதவிகளுக்கு 2 தேர்வுகளை நடத்துவது நியாயமற்ற செயலாகும். குரூப் 4 தேர்வை20 லட்சம் பேர் வரை எழுதுகின்றனர். இதில் பெரும்பகுதியினர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள்தான். தற்போது முதன்மைத் தேர்வு அறிவிப்பால் குரூப் 4 தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை குறையும்.

மேலும், முதன்மைத் தேர்வால் பணி நியமன நடைமுறைகளில் காலதாமதம் ஏற்படும். எழுத்துத்தேர்வு அவசியம் என டிஎன்பிஎஸ்சி கருதினால் முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை இணைத்து ஒரே தேர்வாக நடத்தலாம். கொள்குறி வகையில் 150 வினாக்களும், கடிதம் எழுதுதல் வடிவில் 50 வினாக்களும் கேட்கலாம். இதனால் ஒரே மதிப்பீட்டில் பணிகள் முடிந்துவிடும்.

அதேநேரம் முதன்மைத் தேர்வுவிடைத்தாள் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை. விடைத்தாளை ஸ்கேன் செய்து கணினிவழியில் 2 ஆசிரியர்கள் மதிப்பீடு செய்வர். இருவர் திருத்தியதில் வித்தியாசம் வந்தால் இரண்டுக்குமான சராசரி மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இது தவறான நடைமுறையாகும்.

மேலும், தேர்வுக்கான விடைக்குறிப்பு ஆங்கிலத்தில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதனால் தமிழில் நன்றாக தேர்வு எழுதினாலும் 10-க்கு 2 பேர்தான் தேர்ச்சிபெறுகின்றனர். எனவே, விடைத்தாள் மதிப்பீட்டில் மாற்றம் செய்வதுடன், வினாத்தாளை பிழையின்றி மொழிமாற்றம் செய்ய வேண்டும்.

தேர்வு முறைகேட்டைத் தவிர்க்க கட்டுப்பாடுகள் விதிப்பதில் தவறில்லை. ஆனால், டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள மாற்றங்கள் தேர்வர்களை அச்சுறுத்தும் வகையில்இருக்கின்றன. முறைகேடுகளுக்கு துணைபோன அதிகாரிகள், ஊழியர்களை களைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

இதுதவிர தேர்வர்களின் விடைத்தாள்களை அனைவரும் பார்க்கும்படி இணையத்தில் வெளியிட வேண்டும். ஓஎம்ஆர் தேர்வில் கார்பன்தாள் வழங்குவதுடன், டிஎன்பிஎஸ்சி சார்பில் தேர்வு அறையிலேயே தேர்வர்களுக்கு பேனா வழங்க வேண்டும். தவறுகளை தவிர்க்க தேர்வுப் பணிகளில் ஈடுபடும் அனைத்து பணியாளர்கள், அதிகாரிகளுக்கும் உரிய வழிகாட்டுதல்களை டிஎன்பிஎஸ்சி வழங்க வேண்டும். தனியார் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைப்பதையும், தனியார் கல்லூரி ஆசிரியர்களை தேர்வுப் பணியில் ஈடுபடுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்வியாளர் நெடுஞ்செழியனிடம் கேட்டபோது, ‘‘அரசியல் தலையீடு இல்லாமல் முழுசுதந்திரமாக செயல்பட்டால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி சிறப்பாக இயங்க முடியும். குறைந்தபட்சம் ஆணைய உறுப்பினர்களின் நியனமங்களில் கட்சி தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கடந்த காலங்களிலும் இத்தகைய நிகழ்வுகள் நடந்துள்ளன. எனவே,முறைகேடுகளுக்கு மூலகாரணமாக இருந்தவர்களை கண்டறிந்து துரித நடவடிக்கைகளை ஆணையம் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் டிஎன்பிஎஸ்சி மீதான நம்பிக்கை சரிந்துவிடும்’’ என்றார்.

தனியார் பயிற்சி மைய நிர்வாகி ராஜபூபதி நடராஜன் கூறும்போது, ‘‘துறை அதிகாரிகளின் உதவியின்றி முறைகேடுகள் நடந்திருக்காது. அந்த அதிகாரிகளை களை எடுக்காமல் தேர்வர்களை வதைப்பதுஏற்புடையதல்ல. தேர்வாணையத்தில்தான் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும். விடைத்தாள் திருத்தம், தேர்வு முடிவுகளில் வெளிப்படைத்தன்மையாக இருப்பதுடன், கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்களையும் வெளியிட வேண்டும். அதைவிடுத்து குரூப் 4 பதவிகளுக்கு 2 தேர்வு வைப்பது முறைகேடுகளுக்கே வழிவகுக்கும். மேலும், குறைந்த சம்பள விகிதம் கொண்ட கீழ்நிலை பதவிகளுக்கு இரு தேர்வு நடைமுறை சரியானதல்ல. இதனால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்’’ என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக தேர்வர்கள் ஆ.அமரன், ஏ.ராஜவேல் கூறும்போது, ‘‘குரூப் 4 தேர்வில் கொள்குறி வகை வினாக்களே இடம்பெறும். இதனால் வீட்டில் இருந்தபடியே சமச்சீர் பாடத்திட்டத்தை படித்து எளிதில் தேர்ச்சி பெற்றுவிடலாம். ஆனால், முதன்மைத் தேர்வுடைய குரூப் 1, குரூப் 2 பதவிகளுக்கு பயிற்சி மையங்களின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. ஆங்கில மொழியின் புரிதலும் இருக்க வேண்டும். தற்போது குரூப் 4 தேர்வுக்கும் 2 தேர்வு முறை என அறிவித்துள்ளதால் தனியார் பயிற்சி மையங்களை நாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் தனியார் பயிற்சி மையங்கள் வளம் பெறவே வழிவகுக்கும். எனவே, குரூப் 4 முதன்மைத் தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி திரும்பப்பெற வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x