

ராமகிருஷ்ணர் பிறந்த நாள்- பிப்ரவரி 18
இந்தியாவின் ஆன்மிகத் தலைவர்களில் ஒருவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். இவர் 1836 பிப்ரவரி 18-ம் தேதி இன்றைய மேற்கு வங்க மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள காமார் புகூர் என்னும் கிராமத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஞானம் கொண்டவராக விளங்கினார். பெண் தெய்வமான காளியின் தீவிர பக்தர். தன் மனைவியான ஸ்ரீ சாரதா தேவியை காளி
யாக பாவித்து அவரை பூஜித்தார். சக்தி வழிபாட்டை முன்னிறுத்தும் சாக்தத்தைச் சேர்ந்தவராக அறியப்பட்டாலும் திருமால் வழிபாட்டுக்கான வைணவத்திலும் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டிருந்தார். 19-ம்நூற்றாண்டு வங்காளத்தில் இந்து மதஆன்மிகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டார். மாற்று மதங்களைச் சேர்ந்தவர்களைஇணக்கத்துடன் அணுகி மத நல்லிணக்கத்துக்கான முன்னோடியாக விளங்கினார். ராமகிருஷ்ணரின் பிரதான சீடர்களில் ஒருவர், இந்தியப் பாரம்பரியத்தின் புகழை உலக நாடுகளில் பரப்பிய சுவாமி விவேகானந்தர். ராமகிருஷ்ணர் 1886 ஆகஸ்ட் 16-ல் மறைந்தபின் அவரது போதனைகளைப் பரப்ப ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் என்ற அமைப்பை விவேகானந்தர் தொடங்கினார்.
தமிழ்த் தாத்தா பிறந்த நாள்- பிப்ரவரி 19
‘தமிழ்த் தாத்தா’ என்று அனைவராலும் நன்றியுடன் நினைவுகூரப்படும் உ.வே.சாமிநதய்யர் 1855 பிப்ரவரி 19-ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளஉத்தமதானபுரில் பிறந்தார். தொடக்க நிலை தமிழ்க் கல்வியைப் பிறந்த ஊரிலேயே பெற்றார். 17 வயதில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் திருவாடுதுறை ஆதினத்தில் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்ற தமிழறிஞரிடம் ஐந்தாண்டுகள் பயின்று தமிழறிஞர் ஆனார். கும்பகோணத்தில் இருந்த பள்ளி ஒன்றிலும், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழாசிரியராக பணியாற்றினார். உ.வே.சா.இல்லை என்றால் சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட சங்க இலக்கிய நூல்களை பற்றி நமக்குத் தெரியாமலே போயிருக்கும். அழிந்துபோகும் நிலையில் இருந்த பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களை தேடிக்கண்டுபிடித்தார். பெரும்பாலும் ஓலைச்சுவடிகளாக இருந்த அந்நூல்களை அச்சிட்டுபதிப்பித்தார். இதற்காக தன் சொத்துக்
களை விற்றார். சங்க இலக்கியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் என 90க்கும் மேற்பட்ட நூல்களுக்கு நூல்வடிவம் தந்தவர். பண்டைய இலக்கிய நூல்களுக்கு உரையெழுதும் பணியையும் மேற்கொண்டார்.
உலக சமூக நீதி நாள்- பிப்ரவரி 20
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20-ம் தேதி உலக சமூக நீதி நாளாக ஐக்கிய நாடுகள் சபை அனுசரிக்கிறது. உலக அமைதிக்கும் உலக மக்களின் பாதுகாப்புக்கும் சமூக நீதியின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் நாளாக பிப்ரவரி 20-ம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை அனுசரிக்கிறது. வறுமை, சமூக ஒதுக்கல், பாலினப் பாகுபாடு, மனித உரிமை மறுப்பு போன்ற பிரச்சினைகளை களைந்து சமூக நீதியை நிலைநாட்டுவதன் அவசியத்தை ஐ.நாஅங்கீகரித்து இருக்கிறது. 2020 உலகசமூக நீதி நாளுக்கான கருப்பொருள்- ‘சமூக நீதியை அடையச் சமத்துவமின்மை இடைவெளிகளை நிரப்புதல்’
சர்வதேச தாய்மொழி நாள்- பிப்ரவரி 21
மொழி என்பது தகவல் பரிமாற்றத்துக்கான கருவி மட்டுமல்ல. ஒருவரின் அடையாளம், சமூக நல்லிணக்கம். கல்வி, வளர்ச்சி ஆகியவற்றுக்கும் இன்றியமையாதது. உலகமயமாக்கலின் பரவலால் உலகின் பல மொழிகள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளன. பல தொன்மையான பழங்குடி மொழிகள் அழிந்தேவிட்டன, உலகில் பேசப்படுவதாக இதுவரை அறியப்படும் 6000 மொழிகளில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. மொழிகளின் அழிவால் அம்மொழியை பேசும் சமூகமே ஒட்டுமொத்தாமாக அழிவை நோக்கித் தள்ளப்படுகிறது. நமது நவீன கல்விமுறையும் வாழ்க்கை முறையும் சில நூறு மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கிறது. இந்தச் சூழலில் உலக மொழிகள் அனைத்தையும் பாதுகாக்கவும் மொழிரீதியான பண்பாட்டுரீதியான பன்மைத்துவத்தை பேணவும் உலகின் பன்மொழித்தன்மையைப் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 சர்வதேச தாய்மொழி நாளாக 2000 ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை அனுசரித்துவருகிறது.
- தொகுப்பு: கோபால்