

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் (இசை மற்றும் நாடகப்பிரிவு), மத்திய, மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து ‘இந்திர தனுஷ் தடுப்பூசி’ திட்டத்தின் 2-ம் கட்ட பயிலரங்கத்தை சென்னையில் நேற்று நடத்தியது.
இதில் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்ககத்தின் சுகாதார அலுவலர் டாக்டர் ஆர்.சதீஷ்குமார் பேசியதாவது: அனைத்து அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தடுப்பு மருந்துகளின் வீரியம் குறையாமல் முறையாக பாதுகாத்து பராமரிப்பதற்காக, தமிழகம் முழுவதும் 2,700 குளிர்ப்பதன மையங்கள் செயல்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 99.8 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய சித்த மருத்துவமனையில் கட்டண பிரிவு
சென்னை
சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் மருத்துவமனைக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்நிலையில் காலை நேர கட்டண புறநோயாளிகள் பிரிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஆர்.மீனாகுமாரியிடம் கேட்டபோது, “கட்டண புறநோயாளிகள் பிரிவு தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும். முதல்முறையாக சிகிச்சைக்கு வருபவர்களுக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அடுத்தடுத்து வரும்போது ரூ.450-ம் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டண பிரிவில் 10 நாட்களுக்கான மருந்துகள் வழங்கப்படும்” என்றார்.