

2020 - 2021 ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அகிய இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) பரிந்துரை செய்துள்ளது.
பொறியியல் கல்லூரிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கல்விக் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும். கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டில் கட்டணம் உயர்த்தப் பட்டது. கடந்த 3 ஆண்டுகளாகக் கட்டணம் உயர்த்தப்படாததால் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரி சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் 2020 - 2021 ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அகிய இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ( ஏஐசிடிஇ) பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக மாநில உயர் கல்வித் துறைக்கு ஏஐசிடிஇ கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில், ''புதிய வழிகாட்டுதல்களின்படி, கல்விக் கட்டணம் மற்றும் பேராசிரியர்களின் ஊதியம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். மேலும் நிர்வாக ஒதுக்கீட்டுக் கட்டணத்தை ரூ.85 ஆயிரத்தில் இருந்து ரூ.1.58 லட்சமாக உயர்த்த வேண்டும். அதே போல அரசு ஒதுக்கீட்டுக்கான கல்விக் கட்டணத்தையும் உயர்த்த வேண்டும். ஏற்கெனவே உள்ள கட்டணம், 8 ஆயிரத்து 500 ரூபாயை ரூ.20 ஆயிரமாக உயர்த்த வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
உயர் கல்வித் துறையின் முடிவுகளைப் பொறுத்து பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டணம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.