இந்திய கிரிக்கெட் வரலாறு மாற்றம் கொண்டு வந்த கங்குலி

இந்திய கிரிக்கெட் வரலாறு மாற்றம் கொண்டு வந்த கங்குலி
Updated on
1 min read

பி.எம்.சுதிர்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய கறையை ஏற்படுத்திய சீசன் 1999 - 2000. இந்த காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டங்களில் ஈடுபட்டதாக மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இந்த சீசனில் சூதாட்டப் புகார் சுழன்றடித்தது. தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஹன்சி குரோனே, வீரர்கள் கிப்ஸ், நிக்கி போயே, பாகிஸ்தான் வீரர் சலீம் மாலிக் உள்ளிட்ட பலர் சிக்கிக்கொண்ட இந்த சூதாட்ட புயலில் இந்திய வீரர்களின் பெயரும் அடிபட்டது. கேப்டன் முகமது அசாருதீன், அஜய் ஜடேஜா ஆகியோர் இதில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டனர். அத்துடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவும் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஜென்டில்மேன்களின் விளையாட்டாக கருதப்பட்ட கிரிக்கெட்டில், சூதாட்டமும் ஊழலும் மலிந்துபோனது அந்த ஆட்டத்துக்கே இழுக்கை தேடித்தந்தது. கிரிக்கெட் விளையாட்டே ஏதோ, முன்பே சொல்லி வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் என்பது போன்ற தோற்றம் எழுந்தது. இதனால் சர்வதேச அளவில் மட்டுமின்றி இந்தியாவிலும் கிரிக்கெட்டின் மதிப்பு சரிந்தது. பலர் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதையே விட்டுவிட்டனர்.

இந்த இக்கட்டான கால கட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் சவுரவ் கங்குலி. ஏகத்துக்கும் சரிந்திருந்த இந்திய கிரிக்கெட்டின் இமேஜை சவுரவ் கங்குலியும், அவரது சகாக்களும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக மீட்கத் தொடங்கினர். இந்த கால கட்டத்தில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வீரேந்தர சேவக், லக்‌ஷ்மண், யுவராஜ் சிங் என்று உலகமே பார்த்து பொறாமைப்படக்கூடிய புதிய பேட்டிங் வரிசையொன்று இந்திய அணிக்கு வாய்த்தது. அதே நேரத்தில் அந்த பேட்டிங் வரிசைக்கு தோதாக அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோரைக் கொண்ட சிறப்பான சுழற்பந்து வீச்சு தாக்குதலும் இந்தியாவுக்கு வாய்த்தது.

இப்படி ஒருபுறம் பேட்டிங்கிலும், மறுபுறம் பந்துவீச்சிலும் வலிமைபெற்ற இந்தியா, மீண்டும் டாப் கியரில் பாயத் தொடங்கியது. பொதுவாக கிரிக்கெட் மைதானங்களில் சாதுவாக இருந்த இந்தியவீரர்கள், கங்குலியின் காலத்தில் ஆக்ரோஷமாக மாறினர்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளின் வீரர்கள், தங்களின் எதிரணியைச் சேர்ந்த வீரர்கள் ஆடும்போது அவர்களை கடுப்பேற்றும் விதமாக ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவது வழக்கம். கங்குலி கேப்டனாக மகுடம் சூட்டிய பிறகு, இந்திய அணியும் அதே வழியைக் கையாளத் தொடங்கியது. “எதிரணி வீரர்கள் நம்மை கடுப்பேற்றும் விதமாக நடந்துகொண்டால், நாமும் அப்படி நடந்துகொள்வதில் தவறில்லை என்று புதிய வேதத்தை அறிமுகப்படுத்தினார் கங்குலி.

தனது புதிய சித்தாந்தத்தில் ஓரளவு வெற்றிபெற்ற கங்குலி, பழைய நிலைக்கு மீண்டும் இந்தியாவை உயர்த்தினார். 2003-ம்ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இவரது தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிவரை முன்னேறியது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in