

நெல்லை புத்தகத் திருவிழாவில், பாளையங்கோட்டையிலுள்ள பார்வைத்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பிரெய்லி முறையில் புத்தகம் வாசித்தது பார்வையாளர்களை கவர்ந்தது.
பாளையங்கோட்டை வ.உ.சி. திடலில் 4-வது நெல்லை புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இத் திருவிழாவில் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டிருக்கிறது.
புத்தக வாசிப்பதில் உலக சாதனை முயற்சியாக இத் திருவிழா தொடங்கிய நாளில் இருந்து தொடர்ந்து 24 மணிநேரமும் மாணவ, மாணவிகள் புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
பகல், இரவு என்று சுழற்சி முறையில் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இங்குள்ள ஓர் அரங்கில் அமர்ந்து புத்தகங்களை வாசித்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், நிகழ்ச்சியின் 6-வது நாளில்புத்தக வாசிப்பில் பார்வைத்திறன் குறையுடைய மாணவ, மாணவியரும் பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பாளையங்கோட்டையிலுள்ள பார்வைதிறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 14 மாணவர்களும், 10 மாணவிகளும் நேற்று பிரெய்லி முறையில் புத்தகங்களை வாசித்தனர். அவர்களில் ஜெ. வினோத்குமார், எஸ். முகமது அனஸ் பாதுஷா ஆகிய இரு மாணவர்களும் 24 மணிநேரம் தொடர்ச்சியாக புத்தகம் வாசித்து அசத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை பார்வைத்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜா. கிங்ஸ்டன் ஜேம்ஸ்பால் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.