

சமூக வலைதளத்துடன் ஆதார்எண்ணை இணைக்கும் திட்டம்எதுவும் இல்லை என்று மக்களவையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் எதற்காக என்றும் சமூக வலைத்தளங்களுக்கு கடுமையாக கட்டுப்பாடு விதிப்பதாகவும் மக்களவையில் எதிர்கட்சியினர் நேற்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்து பேசியதாவது:
சமூக வலைதளங்களில் ஆபாச படங்கள் குறிப்பாக குழந்தைகளின் ஆபாச படங்கள் வெளியாவது முக்கியப் பிரச்சினையாக உள்ளது. ஒருவரை பழிவாங்குவதற்காக அவரைப் பற்றிய ஆபாசப் படங்களை வெளியிடுவதும் நாட்டில் அதிகரித்து வருகிறது.
தற்போது உள்ள சமூக வலைதளங்களில் ஆபாசப் படங்கள், பொய்ச் செய்திகள், வதந்திகள் மற்றும் தேசவிரோத கருத்துகள் அதிகமாக பரவுகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடக்கூடாது. ஏனென்றால் நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோம்.
அதே சமயத்தில், சமூகவலைதளங்கள் பயன்படுத்துவோரின் சுயவிவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. இவ்வாறு அமைச்சர் பிரசாத் தெரிவித்தார்.
இதற்கிடையே மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா குறிக்கிட்டு, “சமூக வலைதளத்தினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மிகதீவிரமாக விவாதிக்கப்பட வேண்டும்” என்றார்.