பொதுத்தேர்வுகள் நெருங்குவதால் மார்ச் மாதம் வரை விடுப்பு எடுக்க வேண்டாம்: ஆசிரியர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்

பொதுத்தேர்வுகள் நெருங்குவதால் மார்ச் மாதம் வரை விடுப்பு எடுக்க வேண்டாம்: ஆசிரியர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்
Updated on
1 min read

பொதுத்தேர்வு நெருங்குவதால் மார்ச் வரை விடுப்பு எடுக்க வேண்டாம் என ஆசிரியர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்குகின்றன. இந்த ஆண்டு 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 2-லும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27-லும் தொடங்குகின்றன. 38 மாநகராட்சிப் பள்ளி களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 84 மாணவ - மாணவியர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வையும், 32 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 4,807 மாணவ - மாணவியர் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வையும் எழுத உள்ளனர்.

இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த 3 மாதங்களாக நடந்து வருகின்றன. மாணவ - மாணவியருக்கு காலை, மாலை வேளைகளில் மாநகராட்சி சார்பில் சிற்றுண்டியும் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, பொதுத்தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் அந்தந்த மண்டல அளவில் நடந்து வருகிறது. பொதுத் தேர்வு நெருங்குவதால் மார்ச் வரை, தொடர்புடைய பாட ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதை தவிர்க்க வேண்டும் என இந்தக் கூட்டங்களில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீத தேர்ச்சி பெறவும், மாணவர்கள் உயர் மதிப்பெண் பெறவும் கடுமையாக உழைக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in