Published : 05 Feb 2020 05:54 PM
Last Updated : 05 Feb 2020 05:54 PM

'தரமல்ல, தக்கவைப்பதே முக்கியம்; தேர்வு மட்டுமே மதிப்பீடு அல்ல'- பொதுத் தேர்வு அறிவிப்பு ரத்து குறித்து கல்வியாளர்கள் கருத்து

பேராசிரியர் மாடசாமி, ஆசிரியர் மணிமாறன், எழுத்தாளர் உமாநாத், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு

5 மற்றும் 8-ம் வகுப்புப் பொதுத் தேர்வு அறிவிப்பை தமிழக பள்ளிக் கல்வித்துறை ரத்து செய்துள்ளது. தேர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே கடுமையான எதிர்வினையாற்றிய நபர்கள் இதுகுறித்து என்ன சொல்கிறார்கள்?

அரசு எப்படி அணுகப்போகிறது?- உமாநாத் செல்வன், சிறார் எழுத்தாளர்
’’பொதுத்தேர்வை ரத்து செய்தது நல்ல முடிவு. ஆனாலும் இது தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பலை ஏற்பட்டதால் எடுத்த முடிவாகத் தெரியவில்லை. இதன் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. எனினும் குழந்தைகள் நலனுக்கு இந்த முடிவு ஆதரவானதுதான்.

பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் தொடர்ந்து அச்சத்தையே ஏற்படுத்துகின்றன. அறிவிப்பு வருவதற்கு முந்தைய நாள் துறை செயலர் பிரதீப் யாதவ், தேர்வுகள் நடக்கும் என்று அறிக்கை வெளியிட்டார். அதற்கு முன்பும் அமைச்சர் செங்கோட்டையன் அதே கருத்தைத் தெரிவித்திருந்தார். ஒரே நாளில் தேர்வு ரத்து அறிவிப்பு வெளியானது எப்படி? தேர்வு குறித்து வெளியான அரசாணையை ரத்து செய்து மற்றோர் அரசாணை வந்தால்தான் இதையும் நம்ப முடியும்.

இதை இன்னொரு கோணத்திலும் பார்க்க வேண்டும். பொதுத்தேர்வு வேண்டும் என்றவர்கள் குழந்தைகளின் தரம், ஆசிரியர்களின் கவனக் குறைவு, கற்பித்தல் திறன் சோதிப்பு, பாடத்திட்ட உருவாக்கத்தின் விளைவு ஆகியவற்றைக் காரணமாகக் குறிப்பிட்டனர். அதை இனி அரசு எப்படி அணுகப்போகிறது என்பது முக்கியம். அந்தப் பிரச்சினைகள் கண்டிப்பாக உள்ளன. அவற்றை வெறுமனே கடந்துவிட முடியாது. ஆனால் அதற்கான தீர்வு பொதுத்தேர்வு என்பதைத்தான் அனைவரும் எதிர்த்தனர்.

அத்துடன் புதிய பாடத்திட்டங்கள் மீதான ஆய்வு நேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும். பொதுத் தேர்வுக்கான தயாரிப்புகளால் இந்தப் பணிகள் தடைபட்டுள்ளன. அவை விரைந்து முடிக்கப்பட வேண்டும். அதேபோல 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுக்கின்றனர். அதன் அடிப்படை புரிந்தால்தான் ஏன் அந்தப் பருவத்தில் தேர்வுகள் தேவை என்பதும் புரியும்’’.

தரத்தை விட முக்கியமானது தக்கவைப்பது- பேராசிரியர், கல்வியாளர் மாடசாமி
’’5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ஆதரித்த ஒரே கட்சி பாஜக. அதிமுக கூட இரட்டை நிலைப்பாட்டில் இருந்தது. கடந்த காலத்தில் பாடத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட அதிமுக முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. பாடப்புத்தகங்களை நவீனமாகவும் அறிவியல்பூர்வமாகவும் மாற்ற அமைச்சர் செங்கோட்டையன் பாடப்புத்தகக் குழுவுக்கு முழு சுதந்திரம் அளித்தார். அதேபோல முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சமச்சீர்ப் பாடத் திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். அதிமுக, திமுக என இரு கட்சிகளுக்கும் அடித்தட்டு மக்களிடத்தில் வாக்கு வங்கி அதிகம். அதை உணர்ந்தும் அதிமுக பொதுத் தேர்வைக் கொண்டு வந்ததற்கு அரசியல் அழுத்தமே காரணமாக இருக்க முடியும்.

குழந்தைகளின் தனிப்பட்ட ஆளுமையை அளக்க இதுவரை எந்தக் கருவியும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் வெளிப்படுவார்கள். குழந்தைகளை மதிப்பிடுவதில் பொறுமை அவசியம். தேர்வுகள் ஒன்றும் மதிப்பீட்டுத் தராசுகள் அல்ல. தேர்வுகளை எப்படி எழுத வேண்டும், எவ்வாறு மதிப்பெண் பெற வேண்டும் என்று தெரிந்துகொண்டு கிராமப்புறக் குழந்தைகள் தேர்வுக்குத் தயாராவதில்லை. அவர்கள் பெரும்பாடு பட்டுத்தான் பள்ளிக்கே வந்திருக்கிறார்கள். அவர்களைத் தக்க வைப்பதுதான் முக்கியம்.

தரத்தை விட முக்கியமானது தக்கவைப்பது. அறிவொளி இயக்கத்தில் பணியாற்றியபோது தீப்பெட்டி, பட்டாசுத் தொழிற்சாலைகளில் பெண் குழந்தைகள் மட்டுமே பணியாற்றியதைப் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் பேசி, பள்ளிக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அவர்கள் தேர்வில் தோல்வி என்று லேசாய்க் கண் கலங்கினாலே, வேலைக்குப் போ என்று பெற்றோர் தொழிற்சாலைக்கு அனுப்பிவிடுவர். கிராமப்புறப் பெண் குழந்தைகளின் படிப்புக்கு குறிப்பாக குழந்தைகளுக்குத் தேர்வுகள் சவாலாய் அமைகின்றன.

இதுதான் இறுதி முடிவா?
குழந்தைகள் அனைவருமே நட்சத்திரங்கள். அவர்களைக் கண்டுபிடிக்கவே ஒவ்வொரு ஆசிரியரும் இருக்கின்றனர்; வடிகட்ட அல்ல. தேர்வு ரத்து என்ற அறிவிப்பு நிம்மதியை அளித்திருக்கிறது. இப்போது கூட இதுதான் இறுதி முடிவா என்று தெரியவில்லை. ஏனெனில், 3-ம் வகுப்புக்கே பொதுத்தேர்வு முறையை புதிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது. வேறு ஏதேனும் வடிவத்தில் தேர்வு மீண்டும் வராமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.

ஒரு பழமொழி உண்டு. ''கொட்டுவது கொஞ்ச நேரம்; அள்ளுவது அதிக நேரம்'' என்று. குழந்தைகளை உருவாக்குகிறோமா, உருக்குலைக்கிறோமா என்பதை அரசுகள் உணர்ந்து செயல்படுவது அவசியம்’’.

முற்போக்கான முடிவு- அரசுப் பள்ளி ஆசிரியர் மணிமாறன்
’’தேர்வு என்பதை அரசு, தனியார் என்று வேறுபாடில்லாமல் அனைத்துக் குழந்தைகளுமே வெறுக்கின்றனர். பள்ளி என்பது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் இடமாக இருக்க வேண்டும். மகிழ்ச்சி குறையும்போது கற்றல் நடப்பதில்லை. தேர்வு என்னும் காரணி, மகிழ்ச்சியைக் குலைத்துவிடுகிறது. நன்றாகப் படிக்கும் மாணவரோ, படிக்காதவரோ அனைவருமே தேர்வை வெறுக்கின்றனர்.

அனைத்து மாணவர்களிடமுமே தனியாள் வேற்றுமை (Individual Difference) என்பது உள்ளது. ஒருவர் நன்றாக வரைவார், இன்னொருவர் பாடுவார். மற்றொருவர் நன்றாகப் பேசுவார். அவர்கள் அனைவரையும் தேர்வு என்ற ஒற்றைப் புள்ளியில் அளவிடுவது மோசமான முறை. தேர்வு தவிர்த்து, இன்னும் ஏராளமான மதிப்பீட்டு முறைகள் உள்ளன. அவற்றைக் கொண்டு மாணவர்களை அளவிடலாம். அதைவிடுத்து 3, 5-ம் வகுப்புகளில் பொதுத் தேர்வு வைப்பது என்பது நாட்டை பிற்போக்குத்தனமான பாதைக்கே இட்டுச் செல்லும்’’.

உண்மையான மதிப்பீடு எது?- பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வி உரிமைகள் செயற்பாட்டாளர்
’’பொதுத்தேர்வை அறிவித்த அரசாணை 164, கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையும் அதன் கூறுகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் போடப்பட்டது. அதற்குக் கடுமையாக எழுந்த எதிர்ப்பை அரசு புரிந்துகொண்டு, தேர்வை ரத்து செய்துள்ளது. இது வரவேற்கக்கூடிய ஒன்று.

மக்களாட்சி மாண்புக்கு மதிப்பளித்தார்கள் என்பதற்கு, தமிழக அரசைப் பாராட்ட வேண்டும். எனினும் இது நிரந்தரமா என்ற கேள்வியும் எழுகிறது. கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாகப் புரிந்துகொண்டால், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரசு தேர்வு நடத்தாது.

பொதுவாக சிறு குழந்தைகளுக்கு அதிர்ந்து பேசத் தெரியாது, அந்நியர்களிடம் சகஜமாகப் பேசாது. அந்த சூழலில் கற்றலுக்காக மட்டுமே ஒரு குழந்தை மட்டுமே பள்ளிக்கு வருகிறது. எண்களையும் எழுத்தையும் தாண்டி, ஒட்டுமொத்த சமூகத்தையும் அந்தக் குழந்தை கற்றுக்கொள்கிறது. சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் புரிதலுடன்தான் பள்ளியேவிட்டு குழந்தை வெளியே செல்ல வேண்டும். அந்தப் புரிதலை குழந்தை பெற்றிருக்கிறதா என்பதை அறிவதுதான் உண்மையான மதிப்பீடாக இருக்க முடியும்.

குழந்தைகளின் ஒவ்வொரு நாள் செயல்பாட்டையும் மதிப்பிட வேண்டியது அவசியம். இப்போது நடந்துவரும் தொடர் மதிப்பீட்டு முறையை இன்னும் வலுவாக்க வேண்டும். வருங்காலத்தில் பொதுத்தேர்வை தமிழக அரசு ஏற்கக் கூடாது, அதை மத்திய அரசே கட்டாயப்படுத்தினாலும் சரி’’.

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x