Published : 04 Feb 2020 06:24 PM
Last Updated : 04 Feb 2020 06:24 PM

அறிவிப்பு - சர்ச்சை- ரத்து: 5, 8-ம் வகுப்புப் பொதுத்தேர்வு கடந்து வந்த பாதை

5 மற்றும் 8-ம் வகுப்புப் பொதுத்தேர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், தேர்வு ரத்து செய்யப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்புகள், அதனால் எழுந்த சர்ச்சைகள், அரசின் பின்வாங்கல் என பொதுத் தேர்வு கடந்து வந்த பாதை இங்கே சுருக்கமாக.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு, தமிழகத்தில் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கு பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ''இடைநிற்றல் அதிகரிக்கும், மாணவர்களிடையே உளவியல் பாதிப்பு உருவாகும். மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படும்'' என்றெல்லாம் அறிவுசார் சமூகத்தினர் எதிர்வினையாற்றினர். இதைத் தொடர்ந்து பொதுத் தேர்வு நடத்தப்படாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

5, 8-ம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு

மீண்டும் சில நாட்களிலேயே 5, 8-ம் வகுப்புக்குப் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.

இதற்குத் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பலை உருவானது. எனினும் 5, 8-ம் வகுப்புக்கு ஏப்ரலில் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை செப்.13-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தது.

தேர்வு அட்டவணை வெளியீடு
அதைத் தொடர்ந்து தேர்வுக்கான தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அரசுத் தேர்வுகள் இயக்ககம் கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதன்படி, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 30-ம் தேதியும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 15-ம் தேதியும் பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

முப்பருவத் தேர்வு முறை
சமச்சீர் கல்வி முறையில் மூன்று பருவத்துக்கான தேர்வுகள் தனித்தனியே நடத்தப்பட்டு வந்தன. எனினும் ''5, 8-ம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு மூன்று பருவப் பாடங்களையும் சேர்த்துப் படிக்க வேண்டும். மூன்றிலும் இருந்தே கேள்விகள் கேட்கப்படும்'' என்று அறிவிக்கப்பட்டது. இதற்கும் எதிர்ப்பு உருவானது.

சாதிச் சான்றிதழ் கட்டாயமா?
அதைத் தொடர்ந்து பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ், ஆதார் ஆகியவை கட்டாயம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகின. அது சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில், சாதிச் சான்றிதழ் தேவையில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.

விரைவில் வெளியாகாத மாதிரி வினாத்தாள்
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக பொதுத்தேர்வு எழுதவுள்ளதால், பெற்றோரும் மாணவர்களும் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்த்தனர். எனினும் பொங்கல் முடிந்த பிறகும் வினாத்தாள் வெளியாகவில்லை.

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை 17 லட்சம் பேர் வரை எழுதுவதாக இருந்தனர். ஆனாலும் தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை அரசு உரிய நேரத்தில் வெளியிடவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து 5-ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியானது.

தேர்வு மைய சர்ச்சை
இதற்கிடையே பள்ளியில் இருந்து வேறு தேர்வு மையங்களுக்குச் சென்றே தேர்வெழுத முடியும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின. 1 முதல் 3 கி.மீ. தொலைவுக்குள் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று செப்டம்பர் மாதம் அனுப்பப்பட்ட அறிக்கை ஜனவரியில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்வு மற்றும் தேர்வு மையங்கள் குறித்து வெவ்வேறு தகவல்கள் ஊடகங்களில் தொடர்ந்து வெளியானதால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

சர்ச்சை வெடித்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் இதை மறுத்தார். அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வெழுதலாம் என்று அறிவித்தார். 5 பேர், 8 பேர் என எவ்வளவு குறைந்த மாணவர்கள் என்றாலும் அவர்கள் பயிலும் பள்ளியிலேயே பொதுத் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுத்தேர்வு மையங்களில் மாற்றமில்லை என்று ஆணை பிறப்பிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வை நடத்த அனுமதி அளித்து சில மணிநேரங்களிலேயே தொடக்கக் கல்வித்துறையின் அறிக்கை வெளியானது.

மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள்
இதற்கிடையே 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் 1 மணிநேரம் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என்று ஈரோடு மாவட்டக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியதாக செய்திகள் வெளியாகின. இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதையடுத்து 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையில் சிறப்பு வகுப்பு நடத்தப்படாது என்று தொடக்கக் கல்வி இயக்குநரகம் மறுப்பு தெரிவித்தது.

ஆசிரியர்களைச் சோதிக்கவே தேர்வு
இதற்குப் பிறகும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பொதுத்தேர்வை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எனினும் ''ஆசிரியர்களின் கற்பித்தல் திறனைச் சோதிக்கவே தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் யாரும் ஃபெயில் ஆக்கப்பட மாட்டார்கள். பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பொதுத்தேர்வு ரத்து
இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (பிப். 4) 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக 13.9.2019 அன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.

அவற்றை அரசு கவனமுடன் பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும்'' என்று தெரிவித்துள்ளார்.

பல்வேறு கட்ட கல்வித் துறை அறிவிப்புகளைத் தாண்டி, 5 மற்றும் 8-ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது மாணவர்கள், பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

க.சே.ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x