Last Updated : 03 Feb, 2020 05:22 PM

 

Published : 03 Feb 2020 05:22 PM
Last Updated : 03 Feb 2020 05:22 PM

ஊரக திறனாய்வுத் தேர்வில் முதலிடம் பெற்ற ஆண்டிபட்டி அரசுப் பள்ளி மாணவி: ஒருநாள் தலைமை ஆசிரியையாக கவுரவிப்பு

ஆண்டிபட்டி

ஊரக திறனாய்வுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவி சந்தியா ஒரு நாள் தலைமையாசிரியையாக கவுரவிக்கப்பட்டார்.

கவுரவ தலைமையாசிரியையிடம் சக மாணவர்கள் விடுமுறை கேட்டும், விளையாட அனுமதி கேட்டும் பகடி செய்தனர்.

ஒவ்வோர்ஆண்டும் 9-ம் வகுப்பு மாணவ, மாணவியர்க்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசால் நடத்தப்படும் இத்தேர்வு கணிதம், மனத்திறன், அறிவியல், சமூகஅறிவியல் என்று 4 பிரிவுகளை உள்ளடக்கியது. தலா 25 மதிப்பெண் வீதம் 100 மதிப்பெண் கொண்ட தேர்வு ஆகும். இத்தேர்வில் வெற்றி பெற்றால் பிளஸ்2 வரை ஆண்டிற்கு ரூ.ஆயிரம் வழங்கப்படும்.

இதில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அனுப்பபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பா.சந்தியா 100க்கு 90 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

தற்போது இத்தேர்வு நீட் மற்றும் போட்டித் தேர்வு அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகிறது. இதனால் மனப்பாடத்திறன் இருந்தாலும் யோசித்து பதிலளிக்கும் தன்மை இருந்தால் மட்டுமே இதுபோன்ற தேர்வுகளில் வெற்றி பெற முடியும்.

இது குறித்து மாணவி பா.சந்தியா கூறுகையில், பள்ளி தமிழாசிரியர் இதற்காக சிறப்புப் பயிற்சி அளித்தார். தினமும் மாலையிலும், சனி, ஞாயிற்று கிழமைகளிலும் இதற்காக அவர் கூடுதல் நேரம் செலவழித்து எங்களுக்கு பல்வேறு நுணுக்கங்கள் குறித்து விளக்கினார். அப்பா கூலி வேலை பார்க்கிறார். வறிய குடும்பம் என்பதால் முனைப்புடன் இத்தேர்வை எழுதினேன். எதிர்காலத்தில் ஆட்சியராக வேண்டும் என்பது எனது ஆசை என்றார்.

இவர் தேசிய திறனறிவுத் தேர்வில் மாவட்டத்தில் 2-வது இடம் பெற்று மாதம் ரூ.1000 உதவித் தொகை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழாசிரியர் மணி கூறுகையில், தற்போது இதுபோன்ற தேர்வுகள் மூளைக்கு வேலை தரும் வகையில் அமைந்துள்ளன. பாடங்களுக்கு பின்பு உள்ள கேள்வியை மட்டும் படித்தால் வெற்றி பெற முடியாது. 8-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ஒவ்வொரு பக்கத்தையும் ஆழ்ந்து படிப்பது அவசியம். எங்கள் பள்ளியில் தேர்வு எழுதிய 12 பேரில் 10பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்றார்.

தலைமையாசிரியை இ.ராஜேஸ்வரி மாணவி சந்தியாவின் சாதனையைப் பாராட்டி ஒருநாள் தலைமையாசிரியை பணிபுரிய வைத்து கவுரப்படுத்தி உள்ளார்.

தலைமையாசிரியை போன்றே வகுப்பறைகளுக்குச் சென்று ஆய்வு செய்ததுடன் தான் வெற்றி பெற்ற விதம் குறித்தும் மாணவ, மாணவியர்க்கு விளக்கிக் கூறியுள்ளார்.

ஒருநாள் தலைமையாசிரியை பணி குறித்து சந்தியாவிடம் கேட்டபோது, என்னை தலைமையாசிரியையாக பாவித்த சக மாணவ, மாணவியர் லீவு கேட்டனர். சிலர் விளையாட அனுமதி கேட்டனர் என்று புன்னகையுடன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x