

நீட் முதுகலைப் படிப்பின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஒட்டுமொத்தமாக 55% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிகப்பேர் தகுதி பெற்றுள்ளனர்.
மருத்துவ முதுகலைப் படிப்புகளான எம்டி/ எம்எஸ்/ டிப்ளமோ பட்ட மேற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த முறை, ஜனவரி 5, 2020-ல் ஒரே நாளில் நாடு முழுவதும் தேர்வு நடத்தப்பட்டது.
இத்தேர்வை 1,60,888 தேர்வர்கள் எழுதினர். இதில் 82,995 பேர் ஆண்கள். 77,920 பேர் பெண்கள், 13 பேர் மாற்றுப் பாலினத்தவர்கள். தேசிய தேர்வு வாரியம் (NBE) இந்தத் தேர்வை நடத்தியது. நீட் இளங்கலைப் படிப்பு தவிர்த்து இதர மருத்துவத் தேர்வுகளை இந்த வாரியமே நடத்தி வருகிறது. ஜன.5-ம் தேதி நடைபெற்ற இத்தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
நீட் முதுகலைத் தேர்வில் 55.65% பேர் அதாவது 89,549 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் இருந்து 11,681 பேர் தகுதி பெற்றுள்ளனர். இரண்டாவது இடத்தில் 9,792 பேரோடு கர்நாடகாவும் மூன்றாவதாக 8,832 பேரோடு மகாராஷ்டிர மாநிலமும் உள்ளன.
தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு இந்த முறை மட்டுமே முதுகலைப் படிப்பில் சேரமுடியும். பொதுப் பிரிவினர் தகுதிபெறக் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். இதுவே எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 40 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.