

குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், தேர்வு ரத்தாகுமா என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு நடத்திய குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் நிரந்தரத் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் தரகராகச் செயல்பட்ட சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பள்ளிக் கல்வித்துறை அலுவலக உதவியாளர் ரமேஷ் (39), எரிசக்தி துறை அலுவலக உதவியாளர் மாமல்லபுரம் திருக்குமரன் (35), தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற திருவல்லிக்கேணி நிதீஷ்குமார் (21) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் குரூப்-4 தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஜன.29) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
''முறைகேடு செய்து தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது. தரவரிசைப் பட்டியலில் முன்னிலை பெற்றவர்கள் மட்டுமல்லாது அனைவரின் விடைத்தாள்களும் பரிசோதிக்கப்பட்டுள்ளன. வெளிப்படைத் தன்மையுடன் பலர் விசாரிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு சிலர் செய்த தவறுக்காக அனைத்துத் தேர்வர்களையும் தண்டிக்க முடியாது. எதிர்காலத்தில் முறைகேடு நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட மையங்களில் குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை.
முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது பெரும் புள்ளியாக இருந்தாலும் சரி, கருப்பு ஆடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒட்டுமொத்தத் தேர்வையே ரத்து செய்தால், உண்மையாக தேர்வெழுதி வெற்றி பெற்றவர்கள் பாதிக்கப்படுவர். குரூப்-4 தேர்வை 16 லட்சம் பேர் எழுதி இருக்கின்றனர். அவர்களை மீண்டும் தேர்வு எழுதச் சொல்வது நியாயமில்லை.
சிபிசிஐடி சரியான பாதையில் விசாரணையைக் கொண்டு செல்கிறது. தவறிழைத்த அரசு ஊழியர்கள் சிறைக்கு அனுப்பப்படுவர். வேலை இழப்பர். வருங்காலத்தில் எந்த ஓட்டையும் இல்லாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்படும்''.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.