Published : 28 Jan 2020 07:39 AM
Last Updated : 28 Jan 2020 07:39 AM

இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ் 2-வது ஆண்டாக 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இஸ்ரோவில் பயிற்சி: பிப்.3 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

புதுடெல்லி

இளம் விஞ்ஞானி திட்டத்தின் கீழ் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான விண்வெளி ஆய்வுப் பயிற்சிக்குப் பிப்ரவரி 3-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களிடம் அறிவியல், விண்வெளி ஆய்வுகள் தொடர்பான ஆர்வத்தை மேம்படுத்த இஸ்ரோ பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை (யுவ விஞ்ஞானி கார்யகிரம் - யுவிகா) கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி ஆய்வு தொடர்பான அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

தற்போது 2-வது ஆண்டாக ‘யுவிகா’ திட்டத்தின் கீழ் விண்வெளி ஆய்வு பயிற்சிக்கு மாணவர்களை இஸ்ரோ தேர்ந்தெடுக்க உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

‘யுவிகா’ இளம் விஞ்ஞானி திட்டம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. விண்வெளி தொழில்நுட்பம் பற்றிய அடிப்படை அறிவு,விண்வெளி அறிவியல், பயன்படுத்தும்முறை உட்பட பல்வேறு பயிற்சிகளைமாணவர்களுக்கு அளிக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளில் மாணவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்த இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்காக வருங்கால இந்தியாவை உருவாக்குவதில் முக்கியபங்காற்ற கூடிய இளைஞர்களை தேர்ந்தெடுக்க முடிவெடுக்கப்பட்டது.

தற்போது இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ் 2-வது ஆண்டாக கோடை விடுமுறையின் போது மே11-ம் தேதியில் இருந்து 22-ம் தேதிவரை மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் மாணவர்களுடன் உரையாடல், அவர்களுன் விஞ்ஞானிகள் தங்கள்அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், அறிவியல் ஆய்வுக் கூடங்களைப் பார்வையிடுதல், விண்வெளி ஆய்வுத் துறையினருடன் கலந்துரையாடல், செய்முறை பயிற்சி மற்றும் அவர்கள் என்ன அறிந்து கொண்டார்கள் என்பதற்கான கலந்துரையாடல் ஆகியவை இடம்பெறும்.

இந்த பயிற்சிக்கு ஒவ்வொரு மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் இருந்தும் 3 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநில பாடத் திட்டத்தின் கீழ் 9-ம் வகுப்புப் படிக்கும் (2019 - 20) மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தவிர வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்காக கூடுதலாக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் பங்கேற்க வரும் பிப்ரவரி மாதம் 3-ம் தேதியில் இருந்து 24-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ‘லிங்க்’ பிப்ரவரி 3-ம் தேதியில் திறக்கப்படும். 8-ம் வகுப்பில் கல்வி மற்றும்பெற்ற பரிசுகள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற விவரங்கள்,விளையாட்டுகளில் செய்த சாதனைகள், என்சிசி, என்எஸ்எஸ்அமைப்புகளில் பங்கேற்பு போன்றவற்றின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும்கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பயிற்சியில் இடம்பெற விரும்பும் மாணவர்கள் http://www.isro.gov.in என்ற இணையதளம் வழியாக பிப்ரவரி 3 முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் தற்காலிக பட்டியல் மார்ச் 2-ம் தேதி வெளியிடப்படும். அந்த மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை 23-ம்தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம்செய்ய கேட்டுக் கொள்ளப்படுவார்கள். அவற்றை சரிபார்த்த பின்னர் மாணவர்களின் இறுதி பெயர் பட்டியல் மார்ச் 30-ம் தேதி வெளியாகும்.

இந்தப் பயிற்சி அகமதாபாத், பெங்களூரு, ஷில்லாங், திருவனந்தபுரம் ஆகிய இஸ்ரோவின் 4 மையங்களில் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், அந்த 4 மையங்களில் ஏதாவது ஒன்றில் தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் வந்து செல்வதற்கான பயண செலவு, தங்கும் இடம், உணவு, பயிற்சிக்கு தேவையான பொருட்கள் உட்பட அனைத்தும் இஸ்ரோ ஏற்றுக் கொள்ளும்.

இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு yuvika2020@isro.gov.in என்ற மின்னஞ்சல் அல்லது 080 22172269 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு இஸ்ரோ அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x