

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக நடைமுறைகள் அனைத்தும் இனித் தமிழ் மொழியில் நடைபெறும் என்று துணைவேந்தர் பார்த்தசாரதி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தமிழக மாநில அரசால் நிறுவப்பட்டுள்ள ஒரு பல்கலைக்கழகமாகும். தமிழகச் சட்டப்பேரவை இயற்றிய சட்டத்தின் கீழ் உயர் கல்வியைத் தொடர முடியாத ஆதரவற்றோருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலையில் உள்ள ஆண்/பெண்களுக்காகவும் இன்னும் பிற காரணங்களுக்காக பள்ளிக் கல்வியைத் தொடராதவர்களுக்கும் பயன் தரும் வகையில் இப்பல்கலைகழகம் நிறுவப்பட்டுள்ளது.
பல பாடத்திட்டங்களில் பட்டய, சான்றிதழ், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பாடத்திட்டங்களை வழங்குகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் 2013-2014 ஆம் கல்வியாண்டு முதல் அனைத்துத் துறைகளிலும் நிறைஞர் (M.Phil) மற்றும் முனைவர் (Ph.D.) ஆகிய ஆராய்ச்சிப் பட்டப்படிப்புகள் பகுதி மற்றும் முழு நேர முறையில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்கவேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக நடைமுறைகள் அனைத்தும் இனி தமிழ் மொழியில் நடைபெறும் என்று அறிக்கப்பட்டுள்ளது. இதை துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.