

2020-ம் ஆண்டுக்கான பால சக்தி புரஸ்கார் விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார்.
கலை, கல்வி, கலாச்சாரம், வடிவமைப்பு, புதிய கண்டுபிடிப்பு, துணிச்சல், ஆராய்ச்சி, சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார்’ (பால சக்தி புரஸ்கார் விருது)வழங்கப்படும். இந்த விருதானது, 1996-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2019-ம் ஆண்டுக்காக விருது வழங்கும் விழா ராஷ்டிரிய பவனில் நேற்றுநடந்தது. அதில், புதிய கண்டுபிடிப்புக்கான தேசிய விருதை ஹிர்தேஸ்வர் சிங் என்ற மாற்றுத்திறனாளி மாணவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். அதேபோல், 5 முதல் 18 வயது வரையிலான 49 குழந்தைகளுக்கு இவ்விருதுகளை அவர் வழங்கினார்.
அதில், உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட மேஜிக்ஷோக்களை நடத்திய தர்ஷ் மாலனி (12), இளம் தபேலா கலைஞர் மனோஜ் குமார் லோஹர் (11), பியானோகலைஞர் கவுரி மிஸ்ரா, நடனக் கலைஞர் கோரக் விஸ்வாஸ், இரு திருடர்களிடம் இருந்து ரஷ்ய சுற்றுலாப் பயணியை காப்பாற்றிய இஷான் சர்மா (15), இளம் தத்துவார்த்த ஆசிரியர் ஓம்கார் சிங், மணிப்பூரில் குட்டையில் மூழ்கிய 3 சிறுமிகளை காப்பாற்றிய லால்கன்சுங் (10), பள்ளி சுற்றுச்சுவர் இடிந்தபோது 2 சிறுமிகளை காப்பாற்றிய பெமா உள்ளிட்டோருக்கு ராம் நாத் கோவிந்த் விருது வழங்கி கவுரவித்தார். விருதில் தங்கப்பதக்கம், ரூ.1 லட்சம்ரொக்கப் பரிசு, சான்றிதழ், பாராட்டு பத்திரம் ஆகியவை இடம்பெறும்.