Published : 19 Jan 2020 09:19 am

Updated : 19 Jan 2020 09:19 am

 

Published : 19 Jan 2020 09:19 AM
Last Updated : 19 Jan 2020 09:19 AM

உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க யுஜிசி புதிய திட்டம்: மாணவரின் கல்வி, சிறப்பு திறனை சேமிக்க தேசிய கல்வி வங்கி; இனி ஒரே நேரத்தில் 2 கல்லூரிகளில் படிக்கலாம்

education-bank

சென்னை

மாணவர்கள் சிரமமின்றி உயர் கல்வி பெறும் வகையிலும், அவர்களின் கல்வித் தகுதிகள், சிறப்புத் திறன்கள் ஆகியவற்றை முறையாக பதிவு செய்யும் நோக்கிலும் தேசிய கல்வி மதிப்பு வங்கி திட்டத்தை யுஜிசி அறிமுகம் செய்ய உள்ளது.

நாடு முழுவதும் 993 பல்கலைக் கழகங்கள், 39,931 கல்லூரிகள் மற்றும் 10,725 தனிப்பாடக் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் வழங்கப்படும் பல்வேறு உயர்கல்வி படிப்புகளில் ஆண்டு தோறும் சராசரியாக 3.74 கோடி மாணவர்கள் சேர்கின்றனர். நம் நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை தற்போது 26 சதவீதமாக உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இதை 50 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.


அந்த வகையில், ‘தேசிய கல்வி மதிப்பு வங்கி’ (நாக் - National Academic Credit Bank) என்ற திட்டத்தை செயல்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளது. இதன்மூலம் ஒரு மாணவர் ஒரே நேரத்தில் தனக்கு விருப்பமான வெவ்வேறு கல்லூரிகளில் படித்து பட்டம் பெற முடியும். இதற் கான வரைவு அம்சங்களை வெளியிட்டு கல்வியாளர்களின் கருத்துகளையும் யுஜிசி கேட்டுப் பெற்றுள்ளது. இந்த கருத்துகள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின் றன. அடுத்த கல்வியாண்டில் ‘நாக் வங்கி’ திட்டம் அமலாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து யுஜிசி உயரதிகாரிகள் கூறியதாவது:

ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர், தவிர்க்க முடியாத காரணத்தால் வேறு இடத்துக்கு மாற நேரிட்டால், புதிய இடத்தில் உள்ள கல்லூரியில் நேரடியாக 2-ம் ஆண்டு சேரமுடிவ தில்லை. திரும்பவும் முதலாம் ஆண்டில் சேர வேண்டிய நிலை இருக்கிறது. சிறப்பு சலுகை பெற்ற வெகு சிலருக்கே நேரடியாக கல்வியை தொடர வாய்ப்பு கிடைக்கிறது. இந்நிலையை மாற்றுவதற்காகவே ‘நாக் வங்கி’ திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

வங்கிகளில் ஒருவர் தனி கணக்கு வைத்து, அதில் அவரின் பண இருப்பை பராமரிப்பது போல, தேசிய கல்வி மதிப்பு வங்கியின் (நாக்) செயல்பாடும் இருக்கும். அதில் ஒவ்வொரு மாணவருக்கும் தனி கணக்கு தொடங்கப்பட்டு, அவர்களது கல்வி விவரங்கள் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு பருவத்திலும் பாடவாரியாக மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள், என்சிசி, என்எஸ்எஸ், விளையாட்டு, பிறமொழி அறிவு உட்பட கூடுதல் கல்வித்தகுதிகள் மற்றும் சிறப்பு தகுதிகளும் அவர்களின் ‘நாக்’ வங்கி கணக்கில் ‘வரவு’ வைக்கப்படும்.

இதன்மூலம் இடமாற்றம் போன்ற காரணங்களால் ஒரு கல்லூரியில் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டால் வேறொரு கல்லூரியில் சேர்ந்து மாணவர்கள் படிப்பை தொடரலாம். உடல்நலக் குறைபாடு காரணமாக இடைநின்ற மாணவர்களும் விரும்பிய கல்லூரிகளில் மீண்டும் படிப்பைத் தொடரலாம். இதற்கு அதிகபட்சமாக 8 ஆண்டுகள் அவகாசம் தரப்படும். அதற்குள் மாணவர்கள் படித்து பட்டம் பெற வேண்டும்.

இத்திட்டத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வாறு இணைக்கப்படும் கல்வி நிறுவனங்களில் சேருபவர்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பாடத்தை மட்டும் வேறு கல்லூரியில் சேர்ந்தும் படிக்கலாம்.

அதற்குரிய வருகைப்பதிவு, தேர்ச்சி விவரங்கள் நாக் வங்கியில் பதிவு செய்யப்பட்டு பிரத்யேக சான்றிதழ் வழங்கப்படும். இதனால், ஒரே சமயத்தில் இரு வேறு கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். விருப்பமான தொழில், வேலைவாய்ப்பு சார்ந்த பாடங்களையும் மாணவர்களே தேர்வு செய்து படிக்கலாம். இந்த சேவைக்காக மாணவர்களிடம் குறைவான கட்டணம் வசூலிக்கப்படும். உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, மாணவர்கள் கல்வித்தகுதிகள், சிறப்பு திறன் ஆகியவற்றை முறையாக பதிவு செய்வது, வேலைவாய்ப்பு நோக்கிய கல்வி ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக முதுநிலைபடிப்புகளில் இது அமல்படுத்தப் படும். வரவேற்பை பொறுத்து இளநிலை படிப்புகளுக்கு விரிவுபடுத்தப்படும். மாணவர்கள் மட்டுமின்றி படிக்க விருப்பம் உள்ள அனைவருக்கும் இத்திட்டம் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதேநேரம் நாடு முழுவதும் ஒரே பாடத்திட்ட கல்விமுறை இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இல்லையெனில் பல்வேறு குளறுபடிகள் உரு வாகும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். முதல்கட்டமாக முதுநிலை படிப்புகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். வரவேற்பை பொறுத்து இளநிலை படிப்புகளுக்கு விரிவுபடுத்தப்படும்.


UGCதேசிய கல்வி வங்கிEducation bank

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x