Last Updated : 18 Jan, 2020 06:57 PM

 

Published : 18 Jan 2020 06:57 PM
Last Updated : 18 Jan 2020 06:57 PM

அரசுப் பள்ளிகளில் விவேகதீபினி ஸ்லோகம் கற்பிக்கப்படும்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் விவேகதீபினி ஸ்லோகங்கள் கற்பிக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

வேதாந்த பாரதி சார்பில் இன்று பெங்களூருவில் 'விவேகதீபினி மகாசமர்ப்பணே' என்னும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய எடியூரப்பா, ''விவேகதீபினி ஸ்லோகங்கள் ஆதி சங்கராச்சார்யரால் எழுதப்பட்டவை. அவை ஒருவரின் மனதைப் பரிணமிக்கச் செய்து, அவரை ஒளிரச் செய்கின்றன. மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதன்மூலம் மாணவர்களிடையே நேர்மறையான மாற்றத்தை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உணர்கின்றனர்.

இதனால் கர்நாடகா முழுவதும் பள்ளிகளில் விவேகதீபினியைக் கற்பிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய கலாச்சாரமும் நாகரிகமும் பழமையானவை. தலைசிறந்தவை. இவை குறித்து நாம் பெருமைப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை நடத்திய வேதாந்த பாரதி அமைப்பு ஆதி சங்கராச்சாரியரின் கருத்துக்களை வேதம் மற்றும் உபநிடதங்கள் வழியே ஊக்குவிக்கும் ஓர் அமைப்பாகும். இந்த அமைப்பு, ''50 பள்ளிகளில் இருந்து சுமார் 2 லட்சம் மாணவர்கள் விழாவில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு விவேகதீபினி ஸ்லோகங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன'' என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x