

அமெரிக்காவில் கல்வி கற்பதற்காக செல்லும் மாணவர்கள் சரியான வழிகாட்டி நிறுவனங்களையே அணுக வேண்டும் என்று இந்திய அமெரிக்க கல்விச் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழகங் களின் இந்திய பிரதிநிதிகள் சங்கத்தின் தொடக்க விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இச்சங்கத்தை சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக துணைத் தூதர் ராபர்ட் ஜி பர்கஸ் தொடங்கி வைத்தார். சங்கத்தின் தலைவர் டாக்டர் பால் செல்லகுமார் வரவேற்று பேசியதாவது:
ஆங்கில மொழித் திறனை வளர்த்துக்கொண்டு, அதன் மூலமாக அயல்நாடுகளுக்குச் சென்று கல்வியும் வேலையும் பெறுவது என்பது பலரின் கனவாக உள்ளது. உலகின் தலைசிறந்த 10 பல்கலைக்கழகங்களில், 7 அமெரிக்காவில் உள்ளன. இதை கருத்தில் கொண்டு அமெரிக்காவின் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கச் செல்லும் கனவு பலருக்கு உள்ளது.
ஆனால், கல்வி வழிகாட்டி மையங்கள் என்ற பெயரில் நாள்தோறும் பல நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. அவை மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கல்விக் கனவை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு பணம் பறிக்கும் செயலில் ஈடுபடு கின்றன. எனவே, சரியான கல்வி வழிகாட்டி நிறுவனங்களையே மாணவர்கள் அணுக வேண்டும்.
இந்திய மாணவர்கள் சரியான வழிகாட்டுதல் மூலமாக அமெரிக்கா சென்று உயர்தர கல்வி பெறுவதற்காகவே இந்தசங்கத்தைத் தொடங்கி இருக்கிறோம். வகைப்படுத்தப்பட்ட அறநெறிகளின் அடிப்படையில்தான் இந்த சங்கம் நிறுவப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரங்களை www.aaaae.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களை சங்க செயலாளர் சபேசன் மாணிக்கவாசகத்தை 9841014499 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு பால் செல்லகுமார் தெரிவித்தார்.