

மதுரையில் தனது 51 வயதில் சி.ஏ. (பட்டயக் கணக்காளர்) படிப்பில் பெண் ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்தியாவில் சி.ஏ. படித்தவர்கள் 10 லட்சம் பேர் தேவைப்படுகிறார்கள். தற்போது 1.65 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். மிகப்பெரிய இடைவெளி இருப்பதால், இந்த துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.
ஆனால், சிஏ படிப்பு பற்றிய அச்சம் மாணவர்களிடம் இருப்பதால், இந்த படிப்பை படிக்க தயங்குகின்றனர். ஆனால், ஆர்வமும், சரியான தயாரிப்போடு தொடர்ந்து படித்தால் சி.ஏ. படிப்பில் தேர்ச்சி பெறலாம் என்பதை மதுரை மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்த உமாகிருஷ்ணா என்ற பெண் தனது 51 வயதில் சாதித்துக் காட்டியுள்ளார்.
இவரது மகள், மகன் கல்லூரியில் படிக்கின்றனர். உமா கிருஷ்ணா, இளங்கலை படிப்பில் பி.எஸ்சி. வேதியியலும், முதுகலைப் படிப்பில் எம்.ஏ. ஆங்கிலமும் முடித்துள்ளார். மதுரையில் ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
பொதுவாக பி.காம் படித்த மாணவர்களே சி.ஏ. படிப்பை தேர்வு செய்வர்.
ஆனால், இவர் கல்லூரியில் படித்த படிப்புக்கும், 25 ஆண்டுகள் இவர் பார்த்த வேலைக்கும் துளியும் சம்பந்தமில்லாத துறையான சி.ஏ. படிப்பை தேர்வு செய்து அதில் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 4-ம் தேதி சென்னையில் நடந்த சி.ஏ. பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற அவர் கூறியதாவது:
மருத்துவர், பொறியாளர் கனவு 23 வயதில் ஆசிரியர் பணியைத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் அந்தப் பணியில் மிகுந்த சோர்வு ஏற்பட்டது. பள்ளி நாட்களில் நன்றாகப் படித்தும் என்னால் மருத்துவராகவோ, பொறியாளராகவோ முடியவில்லை என்ற
ஏக்கமும், ஆதங்கமும் மனதில்தொடர்ந்து இருந்தது. இதனால் மாற்றுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
எனது கணவர், ஏதாவது நிறுவனத்தில் பணியில் சேர உதவியாக இருக்கும் என நினைத்து 2012-ம் ஆண்டு என்னை கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்பில் சேர்த்து விட்டார். அப்போதுதான், ‘சிஏ’ படிப்பையும், அதற்கான தேர்வுகளையும் பற்றி நான் அறிந்தேன். அதன்பிறகு சிஏ படிக்க ஆசைப்பட்டேன்.
ஆனால், சிஏ படிப்புக்கு அக்கவுன்ட்டன்சி அவசியம். நான் படித்தது எம்.ஏ. ஆங்கிலம். பள்ளியிலும் நான் அக்கவுன்ட்டன்சி படிக்க
வில்லை. எனது கணவர் அளித்த ஊக்கத்தால், மதுரையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தில் 2014-ம் ஆண்டில் சேர்ந்தேன். தினமும் 10 மணி நேரம் படிப்பேன். காலை 4.30 மணிக்கு எழுந்து படிக்கத் தொடங்குவேன்.
பொருளாதார பிரச்சினை
நான் படித்த இன்ஸ்ட்டிடியூட்டில் என்னுடன் படித்தவர்கள் அனைவரும் என் மகள், மகன் வயது உடையவர்கள் அவர்கள் என்னை நண்பர்களாக ஏற்றுக் கொண்டனர். அவர்களுடன் படிப்புக்கு இடையே சினிமாவுக்கும் செல்வேன். அரட்டை அடிப்பேன். சி.ஏ. படிப்பில் மொத்தம் 16 பாடங்கள். அதில் அக்கவுன்ட்ஸ் மற்றும் காஸ்டிங் பாடங்கள், நான் படித்த படிப்புக்கு தொடர்பு இல்லாததால் அதற்காக தனியாக பயிற்சி பெற்றேன்.
சி.ஏ. இன்ட்டரில் சேர்ந்த முதல் ஆண்டிலேயே முதல் 4 பாடங்களை ஒரே முறையில் தேர்ச்சி பெற்று விட்டேன். அந்த நேரத்தில் கேரளாவில் வசித்த எனது தந்தை இறந்து விட்டார். எனது அம்மாவுக்கு புற்றுநோய். அவரை கவனிக்க வேண்டி இருந்தது. பொருளாதாரப் பிரச்சினையும் இருந்தது. அதனால், படிப்பைத் தொடர முடியவில்லை. சி.ஏ. ஆகும் கனவு தடைபட்டது. ஆனா
லும், முயற்சியைக் கைவிடாமல் மீண்டும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு எனது 51-ம் வயதில் மீதி 4 பாடங்களிலும் அதைத் தொடர்ந்து ஃபைனலில் 8 பாடங்களிலும் தேர்ச்சி பெற்றேன்.
ஒரு விபத்தாக இந்த படிப்பில் சேர்ந்தேன். தற்போது நான் ஒரு சி.ஏ.வாக நிறுவனத்தில் நல்ல வேலையில் சேரலாம். அல்லது தனியாக
ஆடிட்டராக பணிபுரியலாம். ஏதாவது கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலைக்குச் சேரலாம்.
சி.ஏ. படிப்பு என்றாலே மிகவும் சிரமம் என்ற மாயையை உடைக்க வேண்டும். சென்னையைத் தவிர்த்து, மதுரை போன்ற நகரங்களில் சி.ஏ. தேர்வுக்கு சரியான பயிற்சி மையங்கள் இல்லை. நிறைய பேர் இந்த படிப்பை படிக்கத் தயங்குகிறார்கள். வழிகாட்டுவதற்கும் ஆள் இல்லை. அவர்களை சி.ஏ. படிக்க வைக்க வேண்டும் என்பதே எனது கனவு.
இவ்வாறு அவர் கூறினார்.