

காவல் துறை மக்களின் நண்பன் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், காவல் நிலைய சுவர்களில் கார்ட்டூன் வரைந்து கேரள காவல் துறை அசத்தி வருகிறது. போலீஸ் என்றாலும், காவல் நிலையம் என்றாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனம்புரியாத ஒரு பயம் ஏற்படும். அதற்கு ஏற்றார் போல், போலீஸாரும் காவல் நிலையங்களின் சூழ்நிலையும் இருக்கும். இதனாலேயே, காவல் நிலையத்துக்கு செல்ல சாதாரண மக்களுக்கு ஒரு பயம் இருந்துக் கொண்டே உள்ளது.
இதனை மாற்றி, பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் நெருக்கம் ஏற்படுத்தும் முயற்சியில் கேரள காவல் துறை இறங்கியுள்ளது. காவல் நிலையங்களை சுத்தம் செய்து, குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் கவரும் வகையில் கார்ட்டூன் வரைந்து அசத்தியுள்ளது. காவல் துறை பொதுமக்களின் நண்பன் என்பதை உணர்த்தும் சுவர்
ஓவியங்கள் மற்றும் வண்ண விளக்குகளாலும் கேரளாவில் உள்ள காவல் நிலையங்கள் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.
இதில் லஞ்ச ஒழிப்பு, மனிதநேயம் போன்ற கருத்துக்களை பிரதிபலிக்கும் பல கார்ட்டூன்களும், சுவர் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த புதிய முயற்சியை கேரள காவல் துறை தலைவர் (டிஜிபி) லோக்நாத் பேகிரா திருவனந்தபுரத்தில் உள்ள 6 காவல் நிலையங்களில் நேற்று அறிமுகப்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
“காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்தும் வகையில், இந்த புதிய முயற்சி கேரளாவில் உள்ள 481 காவல் நிலையங்களிலும் பின்பற்றப்படும்” என்றார்.