Published : 03 Jan 2020 11:32 AM
Last Updated : 03 Jan 2020 11:32 AM

குழந்தைகளுடன் உரையாடுவோம்: 5- உளவியல் தேவையும் கூகுள் வகுப்பறைகளும்!

அவர்கள் வீட்டை விட்டு வெளியேகூட வந்திருக்காத கிர்கிஸ் குழந்தைகள். ஒரு குன்றின் மீதிருந்த குதிரைக் கொட்டடியை அவர்களுக்கான பள்ளிக் கூடமாக மாற்றுகிறார் தூய்ஷன் என்னும் நபர். அப்பள்ளிக்குத் தானே ஆசிரியராகவும் மாறுகிறார். அவர் கல்வி அறிஞருமில்லை, ஆசிரியர் பயிற்சி பெற்றவருமில்லை, இலக்கணம் கூட அவருக்குத் தெரியாது. ஆனால் கிராமக் குழந்தைகளுக்கு ஆரம்ப எழுத்தறிவையும் கல்வியறிவையும் கற்றுத் தருகிறார். அவரிடம் குதிரைக் கொட்டகையில் பயின்ற அல்டினாய் என்ற மாணவி அந்த மாகாணத்தின் மிகப் பெரும் கல்வி அறிஞராக உருவெடுக்கிறார்.

சிங்கிஸ் ஐத் மாதவ் எழுதிய 'முதல் ஆசிரியன்' என்ற குறு நாவலில் இடம்பெறும் காட்சிகள் இவை. அல்டினாய்க்கு மட்டுமல்ல அந்த கிராமத்தின் அத்தனைக் குழந்தைகளுக்கும் நடத்தை மாற்றத்தை, நல்ல எழுத்தறிவை, வாழ்க்கைக்குத் தேவையான கல்வியை தனது அணுகுமுறையால், மாணவருடனான நல்லுறவால் தூய்ஷன் வழங்குகிறார்.

நம்மில் பலரும் இந்நாட்களில் கூறுவது , 'நாங்கள் எல்லாம் அந்த நாட்களில் மரத்தடியில் தான் படித்தோம்'. அடிப்படை வசதிகள் கூட இல்லாத பள்ளிக்கூடங்களில் கூட ஆசிரியர்களின் அணுகுமுறையால் வெற்றி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்.

இன்றுள்ள பள்ளிகள் அனைத்தும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் ஓரளவு முழுமை பெற்றுள்ளன. இன்றைய நவீன வகுப்பறைகள் ஆங்காங்கே உருவாகி புத்தாக்கம் பெறும் பள்ளிகளை எல்லா இடங்களிலும் காணலாம் . அதே போல அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். பயிற்சியும் பாடப் பொருள் அறிவும் நிரம்பப் பெற்றவர்களாக இருக்கின்றனர். ஆனால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவு முறை, பாடம் தாண்டிய அணுகுமுறையை ஆய்வு செய்தால் உவப்பாக இருக்கிறதா?

சவாலாகும் ஆசிரியப் பணி

நமது வகுப்பறையில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு குழந்தையும் வேறு வேறு சூழலிருந்து வந்தவர்கள். குடும்பச் சூழல், தனியாள் வேறுபாடுகள், மன உணர்வுகள், அடைவுத் திறன்கள் என எல்லாவற்றிலும் வேறுபட்டு இருப்பவர்களே. அதோடு பொருளாதாரச் சூழல், சமூகச் சூழலிலும் வேறுபட்டே வந்திருப்பார்கள். ஒரு குழந்தையின் இத்தனை வேறுபாடுகளையும் மனதில் கொண்டுதான் ஓர் ஆசிரியர் அவர்களை அணுக வேண்டிய சூழல் உருவாகிறது. ஆகவேதான் ஆசிரியப் பணியும் சவாலான பணியாகிறது.

இன்றைய நம் வகுப்பறைச் சூழல் தேர்வுக்கு முக்கியத்துவம் தருவதாக இருப்பதால் ஆசிரியர்களும் அணுகுமுறைக்குப் பதிலாக பாடத்திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவே முன் வருகின்றனர். பல்வேறு சூழல்களிலிருந்து சீரற்ற மனநிலையில் வந்து வகுப்பறையில் அமர்ந்துள்ள குழந்தைகளுக்குப் பாடத்தின் மீது கவனம் குவிவதே இல்லை. ஆசிரியர்களிடமிருந்து அவர்கள் எதிர்பார்ப்பதும் அவர்களுக்குக் கிடைப்பதும் ஒரே நேர்கோட்டில் அமையாததால் சிக்கல்கள் உருவாகின்றன. விளைவு மாணவர்கள் மனதில் பாடங்கள் பதிவதில்லை, கற்றல் என்பது நல்ல அனுபவங்களாக மாறாமல் வடுக்களின் கீறல்களாக மாறி விடுகிறது.

வீட்டில் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் விருப்பங்கள், மனச் சிக்கல்கள் என எதையும் கவனத்தில் கொள்ளாமல் அவர்களைப் படிக்க மட்டுமே வற்புறுத்துகின்றனர். அதற்கு வேலைக்கான தயாரிப்புப் பணியாக பள்ளிக்கல்வி மாறி விட்டதுதான் காரணம். இதன் தொடர்ச்சியாக பெற்றோர்களும் புரிந்து கொள்ளாமல் பள்ளிகளிலும் தங்கள் மன அழுத்தங்கள் புறக்கணிக்கப்படுவதால் குழந்தைகள் தங்கள் இயல்பை மீறி உளவியல் சிக்கல்களுக்கு ஆளாக நேரிடுகின்றனர்.

திடீர் நடத்தை மாற்றம்
கடந்த ஆண்டு அரசுப் பள்ளி ஒன்றில் 6 ஆம் வகுப்பில் புதிதாகச் சேர்ந்த மாணவி ரித்திகா, அழகான கையெழுத்தும் நன்கு படிக்கும் திறனும் பெற்றவராக இருக்கிறார் . வரைதல், கதை சொல்லுதல் முதலிய படைப்பாற்றல்களில் திறனும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவற்றில் சிறப்பாகப் பங்காற்றும் ஆற்றலும் பெற்றவராக இருக்கிறார். ஆனால் 6 மாதங்களுக்குப் பிறகு மாணவரின் நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்படுவதை வகுப்பாசிரியர் கவனிக்கிறார்.

படிப்பதில் சுட்டியான ரித்திகாவின் ஆர்வம் குறைகிறது. எப்போதும் சிரித்த முகத்துடன் வகுப்பில் வளைய வரும் குழந்தையை முகவாட்டமும் சோகமும் சூழ ஆரம்பிக்கின்றன. ஆசிரியர் அவரைக் கவனிக்க ஆரம்பித்ததோடு அவரது இந்த நடத்தை மாற்றத்திற்கான காரணத்தை அறிய முற்படுகிறார். காரணம் அவரது வீட்டுச் சூழல் எனத் தெரிய வருகிறது. அவரது தந்தையின் நடத்தை மாறுதல் தாயைப் பாதிக்க, அதைப் பார்த்த ரித்திகாவின் மன நிலையில் பயம், பதற்றம் சூழ்ந்திருக்கிறது.

இதைப் புரிந்து கொண்ட ஆசிரியர், அவரது பெற்றோரை அழைத்து குழந்தையின் மனநிலையைப் புரிய வைக்கிறார். குழந்தையை இயல்பு நிலைக்கு வர வைக்க நான்கு மாதம் ஆனது. இதற்கு பெற்றோர் துணை தேவைப்பட்டது. இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் மீண்டும் பழைய நிலையை அடைந்தார் ரித்திகா. இங்கு ஆசிரியர் ரித்திகாவின் நடத்தை மாறுதலை அசட்டையாக விட்டிருந்தால் அந்தக் குழந்தையின் கற்றல் அனுபவம் என்றுமே மகிழ்ச்சியாக அமைந்திருக்காது.

இங்கு ஒரு ரித்திகாவுக்கு மட்டுமல்ல , ஓராயிரம் ரித்திகாக்களுக்கு உளவியல் ஆலோசனைகளும் கூடுதல் கவனிப்பும் உரிய அணுகுமுறையும் தேவைப்படுகிறது. சரியான அணுகுமுறை இருக்க வேண்டுமெனில் ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவு பலப்பட வேண்டும். மாணவருக்கு ஆசிரியர் மீது நம்பிக்கை வர வேண்டும். நம்பிக்கை வந்ததால்தான் ரித்திகா மனம் திறக்கிறார். அதன் பிறகு ஆசிரியரது அணுகுமுறை மாணவியையும் பெற்றோரையும் சூழ்கிறது. உளவியல் கல்வி கொடுக்கப்படுகிறது. மாணவியின் மன நலம் மீட்டெடுக்கப்படுகிறது. அவரது அறிவுசார் செயல்கள் மீண்டும் பழைய நிலையை அடைகின்றன. இந்த ஒரு உதாரணம் வழியே ஆசிரியப் பணியின் பொறுப்பும் செயல்பாடுகளும் நமக்குப் புலனாகின்றன.

அனிதாவின் மரணத்துக்கு என்ன காரணம்?
இந்த அணுகுமுறை இருந்திருந்தால் சில வருடங்களுக்கு முன்பு சென்னைப் பள்ளியின் வகுப்பறையில் ஆசிரியர் உமா மகேஸ்வரி அவரது வகுப்பு மாணவனாலேயே கத்தியால் குத்தப்பட்டு இறந்திருக்க மாட்டார்.

மதிப்பெண்களைப் பெற்றும் மன அழுத்தம் தந்த நெருக்கடிதான் மாணவி அனிதாவின் தற்கொலைக்குக் காரணமாக அமைந்தது. ஒரு ஆசிரியர் கூடவா அந்த மாணவியின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள இருந்திருக்க மாட்டார் என்ற கேள்வி, 3 வருடங்களாக என்னைத் துளைத்தெடுக்கிறது. பாடம் தாண்டிய அணுகு முறையும் ஆசிரியர் மாணவர் நல்லுறவும் வகுப்பறைகளில் முக்கியத்துவம் பெறும் பொழுது இது போன்ற இழப்புகள் நிச்சயம் நிகழ்ந்திருக்காது .

கூகுள் வகுப்பறைகள்
மாணவர்க்கு வெறும் தகவல்களை மட்டும் கடத்தும் வகுப்பறைகள் அவர்களது வாழ்க்கையை செம்மைப்படுத்தவோ நெறிப்படுத்தவோ உதவுவதில்லை. பாடத்திட்டத்தை மட்டும் மையமாக வைத்து நகரும் வகுப்பறைகளும் இயற்கையாக மலர்வதேயில்லை. தகவல்களைக் கொட்டித் தரும் வகுப்பறைகள் கூகுள் வகுப்பறைகளே. ஆகவே உயிரோட்டமான வகுப்பறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கான அடிப்படையே மாணவர் மைய வகுப்பறைகள்.

ஒரு பள்ளியில் புறக் கட்டமைப்பு, தளவாடங்கள், கற்பித்தல் உபகரணங்கள், இன்ன பிற அனைத்து வசதிகள் தேவைதான். இவை அனைத்தும் இருந்தாலும் ஆசிரியரின் அணுகுமுறை குழந்தைகள் விரும்பும்படியாக இருக்க வேண்டும். அப்போதுதான் குறைந்தபட்சக் கற்றல் அடைவுகளுடன் ஒரு ஆசிரியரால் கற்பித்தலை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும்.

பள்ளிக்கல்வி என்பது நாம் எப்போதும் பேசுவது போல பாடம், தேர்வு, மதிப்பெண்கள், தேர்ச்சி ஆகியவற்றை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டதல்ல. அவற்றுடன் உளவியல் அணுகுமுறைதான் அழுத்தமாகத் தேவைப்படும் உள்ளீடுகளில் ஒன்று.

- தொடர்ந்து பேசுவோம்

உமா மகேஸ்வரி, ஆசிரியர் - தொடர்புக்கு: uma2015scert@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x