Last Updated : 31 Dec, 2019 04:42 PM

 

Published : 31 Dec 2019 04:42 PM
Last Updated : 31 Dec 2019 04:42 PM

மூன்று நாட்களாக ‘சர்வர்’ முடக்கம்; நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் தவிப்பு: கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இணைய பக்கத்துக்கான சர்வர் மூன்று நாட்களாக முடங்கியதால் பல மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதேபோல் ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளிலும் சேர நீட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு மே 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, கன்னடம், அசாமி, ஒடியா, குஜராத்தி உள்ளிட்ட 9 மொழிகளில் எழுதலாம். தேர்வு எழுத, டிச.2 முதல் டிச.31-ம் தேதி வரை www.ntaneet.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டுமென, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1.8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் நாடு முழுவதும் ஒரேசமயத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்ததால் மூன்று நாட்களாக ‘சர்வர்’ பிரச்சினை ஏற்பட்டது.

இன்றுடன் காலஅவகாசம் முடியும் நிலையில், பலர் விண்ணப்பிக்க முடியாத நிலையே உள்ளது. இதனால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பிளஸ் 2 மாணவர்கள் கூறுகையில், ‘தமிழில் நீர் தேர்வு நடப்பதால் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கூட விண்ணப்பிக்கின்றனர். ஆனால் ஒரு வாரமாகவே ‘சர்வர்’ மெதுவாக செயல்பட்டது. விண்ணப்பித்ததும் 10 நிமிடங்களுக்கு பிறகே ‘பாஸ்வேர்டு’ வருகிறது. அதை பதிவு செய்தால் ‘டைம்அவுட்’ ஆகிறது. விண்ணப்பிக்கும்போதே நின்றுவிடுவதால், பல முறை முயற்சிக்க வேண்டியுள்ளது. இதனால் ஏராளமானோர் விண்ணப்பிக்க முடியவில்லை, என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x