தாம்பூலப் பைகளால் உருவான கிறிஸ்துமஸ் குடில்: அரசுப் பள்ளி ஆசிரியரின் புது முயற்சி

தாம்பூலப் பைகளால் உருவான கிறிஸ்துமஸ் குடில்: அரசுப் பள்ளி ஆசிரியரின் புது முயற்சி

Published on

புதுச்சேரியில் 700 தாம்பூலத் துணிப் பைகளைக் கொண்டு அரசுப் பள்ளி ஆசிரியர் உருவாக்கியுள்ள கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் மரம், நட்சத்திரங்கள் ஆகியவை பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் தங்கள் இல்லங்களில் குடில் அமைத்து வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியரான சுந்தரராசு, தனது வீட்டில் வித்தியாசமான முறையில் தாம்பூலத் துணிப் பைகளைக் கொண்டு குடில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

ஓவிய ஆசியரான சுந்தரராசு ஒவ்வோர் ஆண்டும் வித்தியாசமான முறையில் குடில் அமைத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதற்கு முன்பு காய்கறிகளைப் பயன்படுத்தியும், 1 செ.மீ. அளவில் கிறிஸ்துமஸ் குடில்கள் செய்தும் பார்வையாளர்களை ஈர்த்தார். அதேபோல் தேங்காய் மற்றும் தென்னைப் பொருட்களைக் கொண்டும் கிறிஸ்துமஸ் குடில்களைச் செய்திருந்தார். கடந்த ஆண்டு புத்தகங்களைக் கொண்டு கிறிஸ்துமஸ் குடில் செய்து அசத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து 7-வது வருடமாக இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தனது வீட்டில் வித்தியாசமான முறையில், அனைவரும் துணிப் பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தனது வீட்டில் சுமார் 700 துணிப் பைகளைக் கொண்டு 3 நாட்களில் கிறிஸ்துமஸ் குடிலை அமைத்துள்ளார். அதேபோல கிறிஸ்துமஸ் மரம், நட்சத்திரங்கள் ஆகியவற்றையும் துணிப் பைகளால் உருவாக்கியுள்ளார்.

அவர் அமைத்துள்ள குடிலில் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் தாம்பூலத் துணிப் பைகள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்துப் பேசிய ஆசிரியர் சுந்தரராசு, பொதுமக்கள் அனைவரும் நெகிழிப் பைகளைத் தவிர்த்து துணிப் பைகளைப் பயன்படுத்த வேண்டும். இந்த எண்ணத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இதனை அமைத்துள்ளேன்" என்று குறிப்பிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in