Published : 19 Dec 2019 08:45 AM
Last Updated : 19 Dec 2019 08:45 AM

தேர்வுக்குத் தயாரா? -10-ம் வகுப்பு கணிதத்தில் சதம் அடிக்கலாம்!

தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்

இதர பாடங்களில் இருந்து கணிதம் அடிப்படையில் வேறுபட்டது. கணிதத்தில் மனப்பாடத்துக்கு வாய்ப்பில்லை. புரிந்தால் மட்டுமே கணக்குகள் எளிமையாக இருக்கும். புரியாமல் படிப்பவர்களே கணக்கை கடினம் என்பார்கள்.

பாடத்தின் அடிப்படைகளை புரிந்துகொண்டு அவற்றின் கருத்துக்கள், சூத்திரங்கள் ஆகியவற்றை சரியான இடத்தில் பயன்படுத்த பழகினால், கணிதத்தில் மதிப்பெண் குவிப்பதும், ‘நூற்றுக்கு நூறு’ நோக்கி முன்னேறுவதும் எளிதாகும். முறையான திருப்புதலுடன் பல மாதிரித் தேர்வுகளை தொடர்ந்து எழுதி பார்ப்பதும் முழு மதிப்பெண் தரும். மதிப்பெண் அடிப்படையில் வினாத்தாளை முழுமையாக அறிந்துகொள்வது இதற்கு அடிப்படை.

பகுதி-I ஒரு மதிப்பெண்ணுக்கான இப்பகுதியின் 14 வினாக்களில் 12 வினாக்கள் புத்தகத்திலிருந்தும், எஞ்சிய 2 வினாக்கள் படைப்பு சார்ந்தும் கேட்கப்பட வாய்ப்புள்ளது.

பகுதி-II வி.எண்கள்.15-28. இரு மதிப்பெண்ணுக்கான இப்பகுதியின் 14 வினாக்களிலிருந்து ஏதேனும் நன்கறிந்த 10 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். கட்டாய வினாவான வி.எண்.28, 8-வது பாடத்திலிருந்தே இடம்பெறுகிறது. இவற்றில் ஒரு சில, புத்தக வினாக்களை சற்றே மாற்றியதாக அமையலாம்.

பகுதி-III வி.எண்கள்.29-42. ஐந்து மதிப்பெண்களுக்கான இப்பகுதியின் 14லிருந்து 10 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். கட்டாய வினா (வி.எ.42), 8-வது பாடமானபுள்ளியியல் பாடத்திலிருந்தே கேட்கப்படுகிறது.

பகுதி-IV 8 மதிப்பெண்களுக்கான இப்பகுதியில் (வி.எ.43-44) ‘அல்லது’ வகையிலான 2 வினாக்கள் இடம்பெறுகின்றன. வி.எண்.43 செய்முறை வடிவியலில் இருந்தும், வி.எண்.44 வரைபடம் (கிராஃப்) குறித்தும் கேட்கப்படுகின்றன. 2 வினாக்களின் ‘அல்லது’ வினாக்களும் இதர பாடங்களின் ஏதேனும் கணக்குசார்ந்த வினாக்களாக இடம்பெறுகின்றன.

சென்டம் மாணவர்களுக்கு

ஒரு மதிப்பெண் பகுதியில் விடையுடன் உரிய ‘ஆப்ஷனை’யும் சேர்த்து எழுதிப் பழக வேண்டும். கிரியேட்டிவ் வினாக்களால் சென்டம் பறிபோக வாய்ப்புண்டு என்பதால் அப்பகுதிக்கு கூடுதல் கவனம் தரவும். 8 மதிப்பெண் பகுதிக்கு 3 மற்றும் 4வது பாடங்களை முழுமையாக படித்திருக்க வேண்டும். கிராஃப் பகுதியில் அளவுத் திட்டம், தீர்வினை எடுத்து எழுதுவது ஆகியவற்றை மறப்பதாலும் சென்டம் வாய்ப்பு நழுவலாம். செய்முறை வடிவியலில் உதவி படம் வரைவது மற்றும் அளவுகளை குறிப்பது ஆகியவற்றை மறக்கக் கூடாது.

தொடுகோடு வரைதலில் ‘கணக்கிடுக’ என்று கேட்டிருப்பின், நிறைவாக அதனையும் தீர்த்து ஒரு மதிப்பெண் இழப்பை தவிர்க்கலாம். விடையெழுதத் தொடங்கும் முன்னர் வினாவினை முழுமையாக ஓரிரு முறை வாசித்து புரிந்துகொள்வது இந்த தவறுகளைத் தவிர்க்க உதவும். கணக்குகளில் விடையுடன் உரிய அலகினை சேர்ப்பது அவசியம். அந்த விடையானது தசம இடங்களுடன் இருப்பின், கண்டிப்பாக 2 தசம இடங்களுடன் விடையை தீர்ப்பதும் முக்கியம்.

ஒரு கணக்கினை தீர்க்கத் தொடங்கும் முன்னர், உரிய சூத்திரத்தை எழுதுவதுடன் அதை கட்டமிட்டு தனியாக காட்டி ஒரு மதிப்பெண்ணை உறுதி செய்யலாம். முதல் அலகின்(உறவுகளும் சார்புகளும்) கணக்குகளில், சார்பை f என குறிப்பது அவசியம். அதேசார்பை வரிசை சோடி கணத்தில் எழுதும்போது f(x) என்று எழுதி விடையை ‘{ }'என்ற அடைப்புக்குறிக்குள் எழுத வேண்டும்.

அதிக மதிப்பெண்களுக்கு

ஒரு மதிப்பெண் பகுதியைப் பொருத்தவரை, அனைத்து அலகுகளிலும் முழுமையாகத்தயாராக வேண்டும். 2 மற்றும் 5 மதிப்பெண்பகுதிகளுக்கு ஏதேனும் 6 அலகுகளில் முழுவதுமாக தயாராகி இருப்பது அவசியம். இந்த ஆறில் 1,2,3,7,8 ஆகிய ஐந்தும் மிக முக்கியமான அலகுகள். 8 மதிப்பெண் கிராஃப், செய்முறைவடிவியல் ஆகியவற்றையே தேர்ந்தெடுக்கலாம். வினாத்தாள் மாதிரியில் உரிய பயிற்சி இல்லாதவர்களுக்கு இப்பகுதியில் தவறு நேரிட வாய்ப்பாகிறது.

தேர்ச்சி நிச்சயம்

ஒரு மதிப்பெண் பகுதிக்கு புத்தக பின்பகுதி வினாக்களில் இருந்தே தயாராகலாம். 2 மதிப்பெண் பகுதிக்கு 1,2,7,8 ஆகிய அலகுகளிலிருந்து தலா 2 வினாக்களை எதிர்பார்க்கலாம். இவற்றிலும் 1,8 அலகுகள் தவிர்க்கக்கூடாதவை. இந்த 2 அலகுகளில் இருந்தும் தலா 2 ஐந்து மதிப்பெண் வினாக்களும் இடம்பெற வாய்ப்புள்ளன. அலகு 3-ன் வர்க்க மூலம், அலகு 5-ன் நாற்கரத்தின் பரப்பளவு (பயிற்சி 5.1), அலகு 4-ன் ‘தேல்ஸ், கோண இருசமவெட்டி, பிதாகரஸ்’ என 3 தேற்றங்கள் ஆகியவை முக்கியமானவை. 8 மதிப்பெண் பகுதிக்கான ‘செய்முறை வடிவியல், கிராஃப்’ ஆகியவற்றின் அனைத்து வினாக்களிலும் தேற வேண்டும். இவற்றின் மூலம் எப்படியும் 50 மதிப்பெண்களை குறிவைக்கலாம்.

நேர மேலாண்மை

முதலில் கிராஃப், செய்முறை வடிவியல், தொடர்ந்து 5 மதிப்பெண், அடுத்ததாக 2 மதிப் பெண்கள், நிறைவாக 1 மதிப்பெண் என வினாத்தாள் வினாக்களின் வரிசைக்கு எதிர்போக்கில் விடைத்தாளில் எழுதுவது கணக்குத் தாளின் பிரத்யேகத் தவறுகளைத் தவிர்க்க உதவுகிறது. இரண்டரை மணி நேர தேர்வு+அரை மணி நேர சரிபார்ப்பு என தேர்வறை நேர மேலாண்மையை தீர்மானித்துக் கொள்ளலாம்.

8 மதிப்பெண்ணுக்கு தலா 10 நிமிடம். 5 மதிப்பெண்ணுக்கு தலா 7 நிமிடம், 2 மதிப்பெண்ணுக்கு தலா 4 நிமிடம் என அதிகபட்ச நேரங்களை பிரித்துக்கொண்டு, 1 மதிப்பெண் பகுதியை 20 நிமிடங்களில் எழுத வேண்டும். இந்த 150 நிமிடங்கள் போக மிச்சமுள்ள 30 நிமிடங்களில் 20 நிமிடத்தையேனும் சரிபார்ப்புக்கு ஒதுக்க வேண்டும்.

- பாடக்குறிப்புகளை வழங்கியவர்: ராஜாத்தி சந்திரமோகன், பட்டதாரி ஆசிரியர் கணிதம், வள்ளல் எஸ்.ஐ.அழகர்சாமி
செட்டியார் மேல்நிலைப்பள்ளி, ராயபுரம், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x