

மாணவர்களுக்கு உதவ சிறப்பு அதிகாரிகள், தொடர்பு எண்களை, ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள், அசாம், மேற்கு வங்கம், டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாமியா பல்கலைக்கழகத்துக்குள் புகுந்து மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. மாணவர்கள் பல்வேறு மாநிலங்களில் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜம்மு காஷ்மீர் அரசு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ''ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த, வெளி மாநிலங்களில் படிக்கும் மாணவர்கள் சமூக வலைதளங்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். அமைதியையும் நல்லிணக்கத்தையும் குலைக்கும் விதமாக எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது.
பரவும் வதந்திகளுக்கு யாரும் செவிசாய்க்கக் கூடாது. போபால், ஜெய்ப்பூர், டெல்லி-என்சிஆர், மீரட், டேராடூன், அலிகர், சண்டிகர், புனே, பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, இதுதொடர்பாக உதவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகளைத் தொடர்புகொள்ள தனித்தனி தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏதாவது சங்கடங்கள், சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்கள், தங்களின் குறைகளை அவர்களிடம் தெரிவிக்கலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் உயர் கல்வித்துறை செயலாளர் தாலத் பர்வேஸ், ''நாடு முழுவதும் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.
வெளி மாநிலங்களில் படிக்கும் மாணவர்கள் காஷ்மீர் திரும்ப அரசு அனைத்து உதவிகளையும் செய்துள்ளது'' என்று தெரிவித்தார்.