

ஜாமியா மாணவர்கள் குறித்து கவலை கொள்வதாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. இந்தச் சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வங்கதேசத்தில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக்கூடாது என்று போராட்டக் குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படாததைக் கண்டித்து மேற்கு வங்கத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் டெல்லி ஜாமியா நகரில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது டெல்லி மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 3 பஸ்கள், 2 போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் வெளியாட்கள் பதுங்கி இருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டது. இதனால் 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் #JamiaProtest #JamiaMilia #CAAProtests #DelhiProtest உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, ''அரசியல் பழிவாங்கும் விளையாட்டு எப்போதும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், நானும் எனது நாடும் ஜாமியா மிலியா மாணவர்களை எண்ணிக் கவலை கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.