Published : 14 Dec 2019 06:18 PM
Last Updated : 14 Dec 2019 06:18 PM

இணைந்து செயல்படுங்கள்: மத்திய பல்கலைக்கழகத் துணை வேந்தர்களைச் சந்தித்த குடியரசுத் தலைவர் அறிவுரை

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மத்திய பல்கலைக்கழகத் துணை வேந்தர்களைச் சந்தித்து உயர் கல்வி குறித்துப் பேசினார்.

டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில், பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் துணை வேந்தர்கள் 46 பேர் கலந்துகொண்டனர். இதில் உயர் கல்வித் துறை சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக ஆய்வுக் கூட்டுழைப்பு, காலியிடங்களை நிரப்புவது, முன்னாள் மாணவர்களின் நன்கொடை ஆகியவை பற்றிக் கலந்தாலோசிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ''இந்தியா வறுமையை ஒழிக்கப் போராடி நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாறிவருகிறது. இதற்கு கல்வி நிறுவனங்களும் தங்களின் பங்களிப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நிலையான விவசாயம், உற்பத்தி ஆகியவற்றை ஊக்குவிப்பது, விவசாயிகள் ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்த ஆதரவளிப்பது ஆகியவற்றை நிகழ்த்த மத்திய விவசாயப் பல்கலைக்கழகங்கள் உதவலாம். இதேபோல மருந்து, விமானப் போக்குவரத்து, பெட்ரோலியம் மற்றும் ஆற்றல், தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு, கட்டிடக்கலை உள்ளிட்ட பிற துறைசார் பல்கலைக்கழகங்களும் தங்களது துறையில் முன்னெடுப்பை நிகழ்த்த வேண்டும். குறிப்பாக புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

இதைச் செய்யும் முன் உங்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் மற்றவரிடம் இருந்து கற்றுக்கொண்டு செயலாற்ற வேண்டும்'' என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x