

டிகிரி பெயரையே மாற்றிக் கொடுத்த கல்லூரி வசூலித்த பணத்தை மாணவர்களுக்கே திருப்பி அளிக்குமாறு தேசிய குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மங்களூருவில் புனித அலோசியஸ் கணினி அறிவியல் நிறுவனக் கல்லூரி இயங்கி வருகிறது. சுயநிதிக் கல்லூரியான இங்கு கடந்த 2009-ம் ஆண்டு எம்.எஸ். (சாஃப்ட்வேர் டெக்னாலஜி) படிப்புக்கான சேர்க்கை நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து அங்கு ஏராளமான மாணவர்கள் படிப்பில் சேர்ந்தனர்.
படித்து முடித்ததும் அவர்களுக்கு எம்.எஸ். பட்டத்துக்கு பதிலாக எம்.எஸ்.சி பட்டம் வழங்கப்பட்டது. (இவை இரண்டுமே அறிவியல் முதுகலைப் படிப்புகள் எனினும் எம்.எஸ். தொழில்முறைக் கல்வியாகும்.)
இதை எதிர்த்து 11 மாணவர்கள் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் கல்லூரி சார்பில் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த குறைதீர் ஆணைய உறுப்பினர் வி.கே.ஜெயின், கல்லூரி தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்தார். இழப்பீடாக ரூ.1.12 லட்சம் பணத்தையும் வழக்கு செலவையும் வழங்க வேண்டும் என்று தேசிய குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.