

குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் அம்பாசமுத்திரத்தில் நடத்தப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே புதூர் கிராமம் உள்ளது. அங்குள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாரம்பரியமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில் குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
கபடி, பல்லாங்குழி, பாண்டி, கோலிக்குண்டு, பம்பரம், நூலில் கட்டி விடப்பட்ட முறுக்கைக் கடித்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமியம் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் காவல்துறை சார்பில் நடத்தப்பட்டன.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ''இன்றைய தலைமுறை பெரும்பாலும் செல்போனிலேயே மூழ்கிக் கிடக்கிறது. உடல் இயக்கம் சார்ந்த விளையாட்டுகளில் ஆர்வம் காட்டாமலேயே இருக்கிறது. இந்நிலையை மாற்றவே விழிப்புணர்வுப் போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அவற்றில் கலந்துகொள்ளும் மாணவர்களை ஊக்கப்படுத்தப் பரிசுகளையும் வழங்கினோம். இதுபோலத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்'' என்றனர்.