

தெலங்கானாவில் படிக்கும் பள்ளி மாணவர்கள் சிலர், வெங்காயம் சேர்க்கப்படாததால் மதிய உணவைப் புறக்கணித்து வருகின்றனர்.
அண்மைக்காலமாக வெங்காய விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. இந்திய வெங்காயச் சந்தை வரலாற்றில், இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.140-ஐ தொட்டுள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.190-க்கு விற்கும் நிலையில் விரைவில் இரட்டை சதத்தைத் தொட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக சமீபத்தில் எகிப்து நாட்டில் இருந்து 6,090 டன் இறக்குமதி செய்யப்பட்டது. அதேபோல துருக்கியில் இருந்தும் 11 ஆயிரம் டன் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும், வெங்காயத்தின் விலை பெரிய அளவில் குறையவில்லை.
இதனால் உணவுகளில் பெரிய வெங்காயத்தைத் தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல முட்டை விலையும் தெலங்கானாவில் உயர்ந்துள்ளது. இதனால் சத்துணவு தயாரிப்பவர்கள் சாம்பாரிலும் குழம்பு வகைகளிலும் வெங்காயத்தைத் தவிர்க்கின்றனர்.
இந்நிலையில் தெலங்கானாவில் படிக்கும் பள்ளி மாணவர்கள் சிலர், வெங்காயம் சேர்க்கப்படாததால் மதிய உணவைப் புறக்கணித்து வருகின்றனர். குறிப்பாக கரீம்நகர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களும் ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் சத்துணவைத் தவிர்க்கின்றனர்.
பெரும்பாலான மாணவர்கள் வீடுகளில் இருந்தே உணவை எடுத்து வருகின்றனர். வெங்காயம் இல்லாததால் உண்ண முடியவில்லை என்று காரணம் சொல்கின்றனர். இதுகுறித்துப் பேசும் சத்துணவுத் தயாரிப்பாளர் ஒருவர், ''ஒவ்வொரு சனிக்கிழமையும் வெஜிடபிள் பிரியாணி செய்வது வழக்கம். எனினும் வெங்காய விலை அதிகரிப்பால் மாணவர்களுக்கு பிரியாணி அளிப்பதையே நிறுத்திவிட்டோம்'' என்கிறார்.
அரசுத் தரப்பில் பள்ளிகளுக்குக் குறைவான விலையில் வெங்காயம் மற்றும் முட்டைகளை வழங்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.