

மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் மசோதா 2019-ஐ, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்தியா முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 40-ஐ மனிதவள மேம்பாட்டுத் துறை இயக்கி வருகிறது. இதற்கிடையே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தற்போது இயங்கி வரும் மூன்று சமஸ்கிருதப் பல்கலை.களை மத்தியப் பல்கலைக்கழகங்களாக மாற்ற, பாஜக அரசு முடிவு செய்தது.
இதன் அடிப்படையில் டெல்லியில் உள்ள ராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்ஸ்தான், ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யாபீடம் மற்றும் திருப்பதியில் உள்ள ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யாபீடம் ஆகியவை மூன்று நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை மத்திய பல்கலை.களாக மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதில் ராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்ஸ்தான் 1970 வாக்கில் உருவாக்கப்பட்டது. லால் பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யாபீடம் 1962-ல் தோற்றுவிக்கப்பட்டது. ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யாபீடம் 1961-ல் உருவானது. இவை அனைத்துக்கும் யூஜிசி பின்னாட்களில் நிகர்நிலைப் பல்கலை. அந்தஸ்தை வழங்கியிருந்தது.
இந்நிலையில் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் மசோதா 2019-ஐ, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் பேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சத்யபால் சிங், சமஸ்கிருத மொழியைக் கற்பிக்கும் 3 பல்கலை.களையும் மத்திய பல்கலைக்கழகங்களாக மாற்ற உள்ளதாக அறிவித்திருந்தார். சமஸ்கிருத அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களின் நீண்டகால வேண்டுகோளை முன்னிட்டு, இந்த மசோதா நிறைவேற்றப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.