Published : 11 Dec 2019 11:51 AM
Last Updated : 11 Dec 2019 11:51 AM

நீட் தேர்வு; 3,800 இடங்களை ஓபிசி, எம்பிசி மாணவர்கள் இழக்கும் சூழல்: ஜோதிமணி பேச்சு

முதுகலை நீட் தேர்வுக்கான மத்திய அரசின் குறிப்பாணையில், பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அதை மாற்றி அறிவிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று மக்களவையில் பேசிய அவர், ''நாடு முழுவதும் உள்ள மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களுக்கு, முதுகலைப் படிப்புக்கான நீட் தோ்வு வரும் 2020 ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இதற்காக மத்திய அரசு கடந்த நவம்பா் 1-ம் தேதி குறிப்பாணையை வெளியிட்டுள்ளது.

இத்தோ்வில் மொத்தம் உள்ள 30,744 இடங்களில், 50 சதவீதத்தை மத்திய அரசே கவுன்சிலிங் மூலம் நிரப்பும். தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு முறையில் 50 சதவீதம் பொதுப் பிரிவிலும், 22.5 சதவீதம் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கும், 27 சதவீதம் ஓபிசி, எம்பிசி வகுப்பினருக்கும் வழங்க வேண்டும்.

ஆனால், மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கல்லூரிகளில் மட்டுமே பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரி இடங்களில் ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள குறிப்பாணையில் கூறப்பட்டுள்ளது. இதனால் சுமார் 3,800 இடங்களை இதர ஓபிசி, எம்பிசி மாணவர்கள் இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஆனால், இதே அரசாணையில் உயா் சாதியினருக்கு மொத்தமுள்ள 15,387 இடங்களிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 10 சதவீதம் உயர் சாதியினருக்கு பொதுப் பிரிவு தவிர 1,537 இடங்கள் கிடைக்கும். ஆனால் 27 சதவீத ஓபிசி வகுப்பினருக்கு வெறும் 300 இடங்கள் மட்டுமே கிடைக்கும். இது மிகப்பெரிய சமூக அநீதியாகும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அரசு மருத்துவக் கல்லூரிகளும், பட்ட மேற்படிப்புக்கான இடங்களும் உள்ளன. அப்படியிருந்தும் மத்திய அரசு ஆணையின்படி, ஆண்டுதோறும் சுமாா் 450 இடங்களை தமிழகத்தில் உள்ள ஓபிசி, எம்பிசி மருத்துவ மாணவர்கள் இழப்பார்கள்.

எனவே ஜனவரியில் நடைபெறும் முதுகலைப் படிப்புக்கான நீட் தோ்வுக்கு முன்பாகவே இதைச் சரி செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x