Last Updated : 10 Dec, 2019 11:38 AM

 

Published : 10 Dec 2019 11:38 AM
Last Updated : 10 Dec 2019 11:38 AM

சென்னை ஐஐடி முதற்கட்ட வளாகத் தேர்வில் 998 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை    

சென்னை ஐஐடியில் நடைபெற்ற முதற்கட்ட வளாகத் தேர்வில் 998 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக ஐஐடி சென்னை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''வளாகத் தேர்வுக்கு முன்னதாக நடந்த தேர்வில் (pre—placement offers) 158 பேர் தேர்வாகினர். அத்துடன் தற்போது 840 மாணவர்களுக்கு சர்வதேச நிறுவனங்கள் உட்பட பல்வேறு தலைசிறந்த நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது.

17 நிறுவனங்கள் சார்பில் 34 பேர் வெளிநாடுகளில் பணிபுரியத் தேர்வாகி உள்ளனர். குறிப்பாக மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனம் தனது சிங்கப்பூர் அலுவலகத்தில் பணியாற்ற 17 பேரைத் தேர்வு செய்துள்ளது.

இன்டெல், மைக்ரோசாஃப்ட் இந்தியா, டாட்டா கன்சல்டன்ஸி சர்வீசஸ், ஆக்ஸிஸ் வங்கி, மாஸ்டர் கார்டு, பஜாஜ் ஆட்டோ, மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வளாகத் தேர்வில் கலந்துகொண்டன.

முதற்கட்ட வளாகத் தேர்வில் 1,298 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் 22 சதவீதம் பேர் மாணவிகள் ஆவர். 2020 ஜனவரி-ல் இரண்டாம் கட்ட வளாகத் தேர்வு நடைபெறுகிறது.

பகுப்பாய்வுத் துறையில் 31% மாணவர்கள் வேலை பெற்றுள்ளனர். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் 43% பேரும் தகவல் தொழில்நுட்பத்தில் 23% பேரும் தேர்வாகி உள்ளனர். நுகர்வோர் பொருட்கள் துறையில் 1 சதவீதமும் கல்வித் துறையில் 2 சதவீதமும் வேலை கிடைத்துள்ளது''.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x