

அனைத்து சைனிக் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு 10% இடம் ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியப் பாதுகாப்புப் படைகளான ராணுவம், கப்பற்படை, விமானப் படைகளில் உயர் நிலை அதிகாரிகளாய்த் தேர்ந்தெடுக்க சிறுபிராயத்தில் இருந்தே மாணவர்களைத் தயார்படுத்த மத்திய அரசாங்கத்தால் 1961-ல் சைனிக் பள்ளிகள் நிறுவப்பட்டன. இந்தியா முழுவதும் 31 சைனிக் பள்ளிகள் உள்ளன.
மாணவர்கள் மட்டுமே படித்து வந்த சைனிக் ராணுவப் பள்ளியில், 2018-ம் கல்வியாண்டில் இருந்து மாணவிகளும் படித்து வருகின்றனர். இதற்கிடையே பீஜப்பூர் (கர்நாடகா), சந்திரபூர் (மகாராஷ்டிரா), கோராக்கல் (உத்தரகாண்ட்), கலிகிரி (ஆந்திரப் பிரதேசம்), குடகு (கர்நாடகா) ஆகிய பகுதிகளில் உள்ள சைனிக் பள்ளிகளில் மாணவிகள் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் கருத்து தெரிவித்துள்ளார். இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய அவர், ''2020- 2021 ஆம் கல்வியாண்டில் ஐந்து சைனிக் பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, நாட்டில் உள்ள அனைத்து சைனிக் பள்ளிகளிலும் மாணவிகள் அனுமதிக்கப்படுவர். 10 சதவீத இடங்கள் இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளன.
எந்த மாநிலமாவது சைனிக் பள்ளி வேண்டும் என்று விரும்பினால், மத்திய அரசுக்குத் தெரிவிக்கலாம்'' என்று இணையமைச்சர் ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் தெரிவித்துள்ளார்.