Published : 09 Dec 2019 07:26 AM
Last Updated : 09 Dec 2019 07:26 AM

அமெரிக்க நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித்துறை இணைந்து ‘நீட்’ நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி: விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்'நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி அளிப்பதற்காக அமெரிக்க நிறுவனத்துடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய இருக்கிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்சேர்க்கைக்கு நீட் நுழைவுத்தேர்வு கடந்த 2016-ம் ஆண்டு கட்டாயமாக்கப்பட்டது. எனினும் தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களுக்கு மட்டும் அந்த ஆண்டு நீட் தேர்வில்இருந்து மத்திய அரசு விலக்கு அளித்தது. தமிழகத்தைப் பொருத்தவரையில், 2017-ம் ஆண்டு வரை எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைபிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெற்று வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக தேசிய அளவில் நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

நீட் தேர்வுக்கான பயிற்சிக்கு தனியார் நிறுவனங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, அவர்கள் அதிக எண்ணிக்கையில் நீட் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்திலும் தமிழக அரசு நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் ஒன்றியங்கள் வாரியாக நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட் மற்றும் ஐஐடி ஜேஇஇ நுழைவுத்தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்பு கடந்த செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஈடூஸ் இந்தியா என்ற நிறுவனத்தின் உதவியுடன் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து நீட் தேர்வுக்கு இலவசபயிற்சி அளிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. இதற்காக அமெரிக்க நிறுவனத்துடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசுபள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்க ஒரு வாரத்தில் அமெரிக்க நிறுவனத்தினர் தமிழகம் வருகை தர உள்ளனர். சிறந்த முறையில் நீட் தேர்வுக்கு பயிற்சிதருவதற்கான ஒப்பந்தம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது" என்று கூறியுள்ளார்.

நீட் தேர்வுக்கு ஏற்கெனவே பயிற்சிஅளித்து வரும் ராஜஸ்தான் நிறுவனத்துடன், அமெரிக்கா நிறுவனமும் இணைந்து பயிற்சி அளிக்கும் என்றுஉயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x