

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி அளிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளார்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை எம்.ஃபில் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு வருடத்துக்கான இந்தி மொழி பயிற்சியை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்து அதற்காக ஆறு லட்ச ரூபாயினை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்திருக்கின்றார் என்றும் அந்த ஒரு வருடப் பயிற்சியும் சென்னையில் இயங்கி வரும் இந்தி பிரச்சார சபா மூலமாக நடத்தப்பட்டு அவர்களாலேயே சான்றிதழும் வழங்கப் பெறும் என்றும் திமுக முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ''உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரத்தை உயர்த்தவே இந்தி, பிரெஞ்சு உள்ளிட்ட பல்வேறு மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன. இரண்டு மொழிகளையும் தரமான ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர்.
2014-ம் ஆண்டில் இருந்தே உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிரெஞ்சு மற்றும் இந்தி கற்பிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்ததன் அடிப்படையில், உலக மொழியான பிரெஞ்சு, இந்திய மொழியான இந்தி ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுக் கற்பிக்கப்பட்டது. தமிழை விட அதிகம் பேசப்படும் மொழிகளாக இந்தி, மராத்தி, பெங்காலி, தெலுங்கு மொழிகளில் இருந்து இது தேர்ந்தெடுக்கபட்டது.
இடையில் பிறமொழிப் பயிற்சி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் கற்பிக்கப்படுகிறது. இந்தி பிரச்சார சபாவில் இருந்து நேரடியாக யாரும் வந்து, இந்தியைக் கற்பிக்கவில்லை. அதேபோல இந்தியைக் கட்டாயப் பாடமாக்கவில்லை. விருப்பப் பாடமாகவே உள்ளது. இந்தி வேண்டும் என்று மாணவர்களேதான் தேர்ந்தெடுத்தனர். விருப்பப் பாட அடிப்படையில்தான் இந்தி கற்பிக்கப்படுகிறது.
இன்னொரு மொழியைக் கற்கும் போதுதான் நம் மொழியின் சிந்தனை வளரும். மாணவர்களின் திறனை வளர்த்து அவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க விரும்புகிறோம். இதற்காக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேர்முக வளாகத் தேர்வை நடத்தி வருகிறோம்'' என்றார் அமைச்சர் பாண்டியராஜன்.