Last Updated : 04 Dec, 2019 12:11 PM

 

Published : 04 Dec 2019 12:11 PM
Last Updated : 04 Dec 2019 12:11 PM

பள்ளி வளாகத்தில் காய்கறித் தோட்டம்: விருதுநகரில் அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள்- ஆட்சியர் பாராட்டு

விருதுநகர்

பள்ளி வளாகத்தில் காய்கறித் தோட்டம் அமைத்துப் பராமரித்து வரும் விருதுநகர் அரசுப் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரின் பாராட்டையும் பெற்றுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகர் அருகே உள்ள நடுவப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

மாணவர்களிடையே விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பயிர் சாகுபடி மற்றும் தோட்டப் பயிர்கள் வளர்க்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் பள்ளி வளாகத்தில் காய்கறித் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளித் தலைமை ஆசிரியை சிலம்புசெல்வி மேற்பார்வையில் இப்பள்ளியில் தோட்டக்கலை விவசாய ஆர்வலர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதன் ஒருங்கிணைப்பாளராக பகுதிநேர ஓவிய ஆசிரியர் என்.கந்தசாமி, தமிழாசிரியர் ஆசிரியர் சோலைசெல்வம் ஆகியோர் பொறுப்பு வகித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆசிரியர் கந்தசாமி கூறுகையில், "அழிந்து வரும் விவசாயத்தைப் பாதுகாக்கவும், இளைய தலைமுறையினருக்கு விவசாயத்தின் அவசியத்தையும், தேவையையும் விளக்கும் வகையிலும் இக்குழு தொடங்கப்பட்டது.

இக்குழுவில் 6,7,8ம் வகுப்புகளைச் சேர்ந்த 50 மாணவ, மாணவிகள் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர். முழுக்க முழுக்க பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறித் தோட்டம் மாணவர்களால் மட்டுமே பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது கத்தரி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்ற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்து வளர்த்து எதிர்பார்த்த அளவில் மகசூலும் ஈட்டியுள்ளோம். பள்ளியில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் அனைத்தையும் சத்துணவுக்காக பள்ளிக்கே வழங்கிவிடுவோம்.

தினந்தோறும் மாணவ, மாணவிகள் குழுக்களாகப் பிரிந்து செடி, கொடிகளைப் பாரமரிக்க பயிற்சியளித்து வருகிறோம். மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கெடுத்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் இர.கண்ணன், தோட்டத்தைப் பார்த்து மாணவ, மாணவிகளைப் பாராட்டினார்.

பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் சிறிய பரப்பளவில் காய்கறித் தோட்டம் அமைத்துள்ளோம். பள்ளியில் விரைவில் சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது. அதன்பின், பள்ளி வளாகத்தில் சற்று பெரிய அளவில் மூலிகைத் தோட்டமும் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x